பங்குனி மாத ராசி பலன் (14-03-2021 to 13-04-2021)
மேஷம்

பங்குனி மாத  ராசி பலன்கள்

(14.3.2021 முதல் 13.4.2021 வரை) 

கணித்தவர். மு. திருஞானம், எம்.ஏ. சீர்காழி.


மேஷம்

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

மேஷம் ராசிக்கு இந்த மாதத்தில் 5 கிரகங்கள் மிக யோகமான இடங்களுக்கும், மற்ற நான்கு கிரகங்கள் சாதகமற்ற இடத்திற்கும் நகரப் போகிறது. இதனால் சிலவேளை முயற்சிகளில் தாமத குறுக்கீடுகள் உண்டாகலாம். ஆனாலும் பாதகம் ஏற்படாது. அதேநேரம் மாதம் தொடங்கி 11ம் தினம் கடந்த பிறகு, நினைக்கிற காரியங்கள் 75 சதவீதம் நிறை வேறும். ஆரோக்கியக் கோளாறுகள் இருக்காது. குடும்பத்தில் வைத்திய விரயங்கள் ஏற்பட்டுக் கொண்டி ருந்தாலும், அதற்கும் தீர்வு கிடைக்கும்.

முதல் வாரம் கடந்த பிறகே இல்லத்துக்கான அவசிய கடமை, தேவைகள் பூர்த்தியாகும்.

உத்தியோகம், பதவி விஷயங்களில் சச்சரவு, இடையூறு இருந்தால் அதனை செவ்வாய் முறியடித்து நிம்மதி தரும். தொழில், வியாபார, நிர்வாக சங்கடங்களை குரு சரிப்படுத்திவிடும். மணவாழ்க்கை தொடர்பான சஞ்சலங்களை சுக்கிரன் தீர்த்து வைப்பார்.  பயண விஷயங்களை ராகு லாபகரமாக மாற்றுவார். சொத்துபத்து விஷய நிறைவேற்றங்களை சனி சாதகமாக மாற்றப் போகிறார். திருமண, சுபசடங்குங்கள் தடையின்றி நிறைவேறும்.

பரணி நட்சத்திர இடம் இருபாலரும் 4வது வாரம் கவனத்துடன் செயல்பட வேண்டும். இம்மாத வெள்ளி, சனி, புதன்கிழமைகள் அதிர்ஷ்டங்களை உண்டாக்கும். 3, 6, 11, 16, 22வது நாட்களில் உயர்வு அதிர்ஷ்டங்கள் உண்டு. மொத்தத்தில் மாத முடிவுக்குள் ஆச்சரியமான திருப்பங்களை தரவிருக்கும் மாதம்.

பெண்கள்: அஸ்வினியினருக்கு குடும்பத்துக்குள் சாதக, அதிர்ஷ்ட, மனநிறைவு சம்பவங்கள் ஏற்படும்.

மாணவர்கள்: அயலுார் கல்வி கற்கும் முடிவுகளுக்கு சாதகமான திருப்பங்கள் காத்துள்ளன.

விவசாயிகள்: நிலபுலன், உற்பத்தி சார்பாக கடந்த மாதமே மேன்மைகள் ஏற்பட்டுவிட்டதால் கவலையில்லை.

தொழிலதிபர்கள்: 13 மாதங்களாக போட்டு வரும் திட்டங்களுக்கு இந்த மாதம் வெற்றி உண்டு.

அனுகூல நட்சத்திரங்கள்: ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், பூராடம், திருவோணம், பூரட்டாதி.

பரிகாரம்: 

வெள்ளிக்கிழமைகளில் சிவபெருமானுக்கு வில்வம், விபூதி தந்து அர்ச்சனை செய்து வழிபட்டப்பின் நவக்கிரக வலம் வரவும்.

ரிஷபம்

ரிஷபம்

(கார்த்திகை 2, 3, 4ம் பாதம்,ரோகிணி, மிருகசீரிடம் 1, 2,ம் பாதம்)

இந்த மாதம் ரிஷபம் ராசிக்கு சூரியனும், சனியும் அற்புத அதிர்ஷ்ட சஞ்சாரத்துடன் சுழன்று கொண்டிருப்பதால், காரிய முயற்சிகளில் 90 சதவீதம் வெற்றியும் சாதகமும் கிடைக்கப் போகிறது.

ஆரோக்கிய நிலை நிம்மதியையும், சந்தோஷத்தையும் தரும். இல்லத்துக்குள் ஏற்பட்டு வருகிற சச்சரவுகளுக்கும் நிம்மதியான தீர்வு உண்டு. கையில் உள்ள பணம் கரைந்து வருவதற்கு இந்த மாதத்தில் மனநிறைவான திருப்பம் ஏற்படப் போகிறது. 

உத்தியோகம், பதவி விஷயங்களில் அலைக்கழித்து வரும் சச்சரவுகள் முடிவுக்கு வரப்போகிறது. சக ஊழியர் களால் அனுபவித்து வரும் வீண் சச்சரவுகளும், அவதுாறுகளும் மாறிவிட இருக்கிறது.

தொழிலிலும் வியாபாரத்திலும் அடுக்கடுக்கான உயர்வு அதிர்ஷ்டங்கள் காத்துள்ளது. சொத்துபத்து வகையிலான சங்கடங்கள் தீர்வாகப் போகிறது. வம்பு, வழக்கு, கடன் பஞ்சாயத்து விஷயங்கள்  70 சதவீதம் முடிவுக்கு வரப்போகிறது. கோர்ட், போலீஸ் மற்றும் மணவாழ்க்கை சார்பான விஷயங்கள் தொடர்ந்து கொண்டிருப்பின் அதற்கும் சாதகமான திருப்பங்கள் ஏற்படும்.

திருமண சுபகாரிய விஷயங்களில் தடை ஏற்படாது. புத்திர பாக்கிய கவலைக்கு அதிர்ஷ்டகரமான தீர்வு கிடைக்கும்.

ரிஷப ராசி மிருகசீரிட நட்சத்திரக்காரர்கள் 2வது வாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு 6வது தினம் முடிந்த பிறகு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. பொன், பொருள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் மனநிறைவாக ஏற்படும்.

இம்மாத ஞாயிறு, திங்கள், சனிக்கிழமைகளில் எதிர்பாராத மேன்மைகள் காத்துள்ளன. 4, 7, 12, 13, 14, 17வது தினங்களில் ஆச்சரிய அதிர்ஷ்டங்கள் உண்டு.

பெண்கள்: இம்மாத 8ம் தினத்துக்குப் பிறகு ரோகிணி நட்சத்திரக்காரர்களின் இல்லத்தில் சுபிட்ச மேன்மைகள் நடக்கும்.

மாணவர்கள்: உயர்க்கல்வி தொடர்பாக எடுத்துள்ள முடிவு, தாய்வழி சொந்தங்களால் சாதகமாக முடியும்.

விவசாயிகள்: ஒரு புதிய அனுகூலம் அரசாங்கத்தால் கிடைத்து சந்தோஷம் தரும்.

தொழிலதிபர்கள்: 2வது வார மத்தியில் லாப செய்தி ஒன்று கூட்டாளிகள் மூலம் கிடைக்கப் போகிறது. 

அனுகூல நட்சத்திரங்கள்: கார்த்திகை, திருவாதிரை, பூசம், பூரம், சுவாதி, மூலம், திருவோணம்.

பரிகாரம்: பிரதி செவ்வாய்க்கிழமை எமகண்ட வேளையில் துர்க்கை அம்மனுக்கு சிவப்பு வஸ்திரம் சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து வழிபடவும்.

மிதுனம்

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதம்)

இந்த மாதம் 3க்குடைய சூரியன் பத்தாம் இடத்தில் நிற்பதும், 6க்குடைய செவ்வாய் 12ம் இடத்தில் நின்று தன்னுடைய ஆட்சி வீட்டை பார்ப்பதும், மாதம் தொடங்கி, 13வது நாளுக்குள் உங்களுக்கென தனிப்பட்ட உயர்வு அதிர்ஷ்டங்களை கொடுக்கப் போகிறது. ஆரோக்கியத்துக்கு குறையே இல்லை. குடும்பத் தேவை, அத்தியாவசிய கடமை விஷயங்கள் 70 சதவீதம் நிவர்த்தியாகும்.

பண விஷயங்கள் சரளமாகிக் கொண்டே வரும். கடன் விஷயங்களில் மாதம் முழுவதும் எந்த பிரச்னையும் தொல்லையும் இருக்காது. வம்பு, வழக்கு விஷயங்கள், கோர்ட், போலீஸ் ரீதியான சிக்கல்கள் இம்மாத 21ம் தினத்துக்குப் பிறகு உங்கள் பக்கம் சாதகமாகும்.

சுபகாரிய விசேஷங்களும், வாரிசுகளின் எதிர்கால உயர்வின் பொருட்டு எடுத்து வரும் முயற்சிகளிலும் அதிர்ஷ்ட, சாதக முடிவு கிடைக்கும். உத்தியோகம், பதவி விஷயங்கள் முதல் வாரம் கடந்த பிறகு உயர்வு மகிழ்ச்சியினை தரும்.

தொழில், வியாபாரம், நிர்வாகம், பட்ஜெட் விஷயங்களெல்லாம் ஏற்றத்தைத் தரும்.

இம்மாதத்தின் செவ்வாய், புதன் மற்றும் சனிக்கிழமை களில் சவுகரியங்களும் பொன், பொருள், ஆடை, ஆபரண, வாகன, சொத்துபத்து சேர்க்கைகளும் காத்தி ருக்கிறது.  புத்திரபாக்கிய கவலையில் உள்ள இளம் தம்பதியர்களின் வாழ்வில் சந்தோஷம் மழலை ரீதியாக ஏற்படப் போகிறது. இம்மாத 6, 9, 11, 16, 23வது தினங்களில் எதிர்பாராத பணவரவு மற்றும் சாத்திய மில்லாத காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

பெண்கள்: திருவாதிரை மற்றும் மிருகசீரிட நட்சத்திரத்தாருக்கு குதுாகல சம்பவங்கள் ஏற்படவிருக்கிறது.  

மாணவர்கள்: உயர்க்கல்வி சம்பந்தமான குழப்பங்க ளுக்கு சரியான விடிவு கிடைக்கப் போகிறது.

விவசாயிகள்: உயர்வு மகிழ்ச்சிகளும், புதிய நிலபுலன் சேர்க்கை விருத்திகளும் ஏற்படடும்.

தொழிலதிபர்கள்: பழைய தொழில் கூட்டாளிகள் விலகி, புதிய திறமைமிக்க கூட்டாளிகள் இணைவார்கள்.

அனுகூல நட்சத்திரங்கள்: புனர்பூசம், மகம், உத்திரம், சுவாதி, அனுஷம், பூரட்டாதி, அஸ்வினி.

பரிகாரம்: ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரகங்களை 11 முறை வலம் வந்து பிரார்த்தனை செய்தபின் ஒருமுறை திருநள்ளாறு சென்று வரவும்.

கடகம்

கடகம்

(புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

கடந்த மாதங்களை விட, இந்த பங்குனி மாதம்தான் மிகப்பெரிய சவுகரிய வளர்ச்சி, அதிர்ஷ்டங்களை கொடுக்கப் போகிறது என்று ராசிக்கு 9ம் இடத்துக்கு வந்திருக்கும் சூரியனும், 11ம் இடத்தில் வந்து நிற்கும் செவ்வாயும் அடித்துச் சொல்கின்றன.

இனி எந்த பெரிய கஷ்டங்களையும் அனுபவிக்க வேண்டிய அவசியம் கிடையாது. காரணம் ராசியைப் பார்க்கும் குரு, செவ்வாயோடு சேர்ந்திருக்கிற ராகு மிகப்பெரிய திருப்புமுனை அதிர்ஷ்டங்களை, இழந்ததை, எதிர்காலத்துக்கான உயர்வுகளை விருத்திகளை கொடுத்து விடுவார்கள்.

ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கப் போகிறது. மருந்து, மாத்திரை விரயங்கள் இருக்காது. நீடித்து வரும் நோய், பிணி சங்கடங்களுக்கும் தீர்வு உண்டாகிவிடும். நாலாபக்கமும் விரட்டிக் கொண்டிருக்கும் கடன், வழக்கு பிரச்னைகளுக்கும் முழுமையான தீர்வு கிடைக்கப் போகிறது.

உத்தியோகம், பணி, பொறுப்பு விஷயங்களில் 80 சதவீதம் அதிர்ஷ்ட மேன்மைகள் காத்துள்ளன. வியாபாரம், நிர்வாகம், அயலுார் தொழில் திட்டங்கள் அனைத்துக்கும் அதிர்ஷ்ட திருப்புமுனையும், சாதக திருப்தியும் கிடைத்து விடும்.

அயல்தேச ரீதியான தொழில், முதலீடு விஷயங்கள் நன்மைகரமான மாற்றங்களை கொடுக்கும்.

திருமண சுபகாரிய, சடங்குகள் சட்டென்று ஆச்சரியப்படும்படி நிறைவேறும். குறிப்பாக பூசம் நட்சத்திர இளம் இருபால ருக்கும், மறுமண எதிர்பார்ப்பில் இருப்பவர்களுக்கும் திருமணம் கைகூட இருக்கிறது.

இம்மாத 4, 12, 17, 18, 22வது நாட்களிலும், புதன், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள், பணம், பொருள் வரவுகள், ஆடை, ஆபரணச் சேர்க்கைகள், சொத்துபத்து, வாகன விஷய முன்னேற்றங்கள் காத்துள்ளன.

பெண்கள்: இந்த ராசி அனைத்து நட்சத்திரக்காரர்க ளுக்கும் சுப மகிழ்ச்சியும், குடும்ப விருத்தியும் ஏற்படப் போகிறது. மாணவர்கள்: ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்கு விருப்பப்பட்ட உயர்க்கல்வி அமைந்துவிடும்.

விவசாயிகள்: நீண்ட காலமாக இலக்கு வைத்திருக்கும் நில சேர்க்கை விஷயங்கள் கைகூடும்.

தொழிலதிபர்கள்: அயலுார், அயல்தேச தொழில் முதலீடு திட்டங்களை துணிச்சலாக ஆரம்பிக்கலாம்.

அனுகூல நட்சத்திரங்கள்: மகம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி.

பரிகாரம்: செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமைகளில் குலதெய்வத்துக்கு அபிஷேக, ஆராதனை செய்யவும். அன்னதானம் செய்யவும்.

சிம்மம்

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

சிம்மம் ராசிக்கு எப்போதும் பெரிய உயர்வுகளையும், செல்வ சேர்க்கைகளையும், சந்தோஷ லாபங்களையும், கொடுக்கக்கூடிய முழு முதல் யோக கிரகமான செவ்வாய், மாதம் முழுவதும் 10ம் இடத்தில் நிற்பது உங்களுக்கான அனைத்து காரிய வெற்றிகளையும் அதிர்ஷ்டங்களையும் கொடுக்கப் போகிறது.

ராசிநாதன் 8ம் இடத்தில் நிற்பது சிலவித மனசோர்வுகளை இடையிடையே லேசாக ஏற்படுத்தும். ஆனாலும் பாதகம் இல்லை. குடும்ப நிலை நல்லபடியாக இருக்கும்.

ஆரோக்கிய குறை கிடையாது.  உத்தியோகம், பொறுப்பு விஷயங்கள் எல்லா சாதகங்களையும் கொடுக்கப் போகிறது. கடன் விஷயங்கள் அடங்கியே இருக்கும். கொடுக்கல், வாங்கல் செயல்பாடுகளில் திருப்தியான போக்கு நிலவும். செவ்வாய், ராகு இணைவு வம்பு, வழக்கு, கோர்ட், போலீஸ் சார்பான விஷயங்களில் முழு வெற்றி கொடுக்க இருக்கிறது.

தொழில், வியாபார நிலை அபரிமித லாபங்களை கொடுக்கப் போகிறது. சொத்து வாங்குவது குறித்த நடவடிக்கைகளில் சந்தோஷமான திருப்பம் ஏற்படும்.

குடும்பம், வாழ்க்கைத்துணை, வாரிசுகள் சார்பான உயர்வு நடவடிக்கைகளில் 75 சதவீதம் நிம்மதி, வெற்றி காத்துள்ளது. மகம் நட்சத்திர இளம் வயது தம்பதியர்களின் மணவாழ்க்கை சிக்கல், பிரச்னைகள் முடிவுக்கு வரும். திங்கள், வெள்ளி மற்றும் புதன்கிழமைகளில் எதிர்பாராத உயர்வுகளும் அதிர்ஷ்டங்களும் பணவரவுகளும் காத்திருக்கிறது.

இம்மாத 3, 6, 8, 9, 15, 18வது தினங்களில் நினைத்துப் பார்க்காத ஆச்சரிய, அதிர்ஷ்ட சம்பவங்களும், பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

பெண்கள்: மகம் மற்றும் உத்திர நட்சத்திரக்காரர்களின் சங்கடங்களுக்கு சந்தோஷ முடிவு காத்துள்ளது.

மாணவர்கள்: உயர்க்கல்வி தொடர்பான குழப்பங்கள் முற்றிலுமாக தீர்ந்துவிடும்.

 விவசாயிகள்: முதல் வாரம் கடந்த பிறகு நிலபுலன், பூர்வீக நிலபுலன் ஆஸ்திகள் சாதகத்தைக் கொடுக்கும்.

தொழிலதிபர்கள்: உத்திரம் நட்சத்திரக்காரர்கள் அயல்தேச, மாநில பெரிய பட்ஜெட் முதலீட்டில் இறங்கி லாபத்தை பெற இருக்கிறார்கள்.

அனுகூல நட்சத்திரங்கள்: அஸ்தம், விசாகம், அனுஷம், மூலம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி.

பரிகாரம்: பிரதி செவ்வாய்க்கிழமைகளில் எமகண்ட நேரத்தில் விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபடவும்.

கன்னி

கன்னி

(உத்திரம் 2, 3, 4ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2ம் பாதம்)

கடந்த பல மாதங்களாக உங்கள் ராசிக்கு செவ்வாய்க்கிரகம் அவ்வளவு சாதகமாக சஞ்சரிக்கவில்லை. ஏகப்பட்ட அசவுகரியங்களையும், தடைகளையும், தாமதத்தையும், காரணமற்ற இழப்புகளையும் சந்தித்து வாழ்க்கையே வெறுத்துப் போகும்படி செய்தன எல்லா கிரகங்களும்.

இப்போதுதான் உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட கிரக சஞ்சாரங்கள் ஓரளவு சுழல ஆரம்பித் திருக்கிறது. இந்த அமைப்புப்படி மாதம் தொடங்கி 19வது தினம் முடிவதற்குள் வளர்ச்சிகளையும் அதிசயங்களையும், அதிர்ஷ்டங்களையும் லாப உயர்வுகளையும் அடைந்து விடுவீர்கள். ஆக இந்த மாதத்தில் உங்கள் ராசிக்கு பின்னடைவு, சச்சரவு, தொல்லை ஏற்படப் போவதில்லை.

குடும்பத்தில் இனிமையான வளர்ச்சி, திருமண சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கப் போகிறது. ஆரோக்கிய கெடுபிடிகளும் தீர்ந்துவிட இருக்கிறது. மணவாழ்க்கை தொடர்பான சச்சரவுகள், சங்கடங்கள் தீரப்போகிறது. பணம் விஷயங்கள் 90 சதவீதம் திருப்தியான வளர்ச்சியையும் சரளங்களையும் கொடுக்கப் போகிறது. ஒட்டுமொத்த கடன்களுக்கும் முடிவு ஏற்படும். உத்தியோகம், பொறுப்பு வகைகள் மற்றும் ஊதிய சம்பந்தமான விஷயங்களில் பெரிய ஏற்றம் காத்துள்ளது.

தொழில், வியாபார, பட்ஜெட் விஷயங்கள்  லாபத்தையும், புதியவர்கள் மூலம் சகாயங்களையும், இதுவரை இணையாத கூட்டாளிகள் மூலம் லாபம், அடுத்தக்கட்ட தொழில் தொடக்கம் ஏற்படும்.

இம்மாத வெள்ளி, திங்கள் மற்றும் சனிக்கிழமைகளிலும், 2, 6, 9, 13, 17, 23வது நாட்களிலும் சந்தோஷ அதிர்ஷ்டங்கள் உண்டு. பொன், பொருள், ஆடை, ஆபரண, சொத்து விருத்திகளும் ஏற்படப் போகிறது.

பெண்கள்: முதல் வார இறுதிக்குள் குடும்ப ரீதியாக திருப்தி சுபிட்சங்கள் ஏற்படப் போகிறது.

மாணவர்கள்: சித்திரை நட்சத்திரக்காரர்கள் கல்வியில் அதீத நாட்டம் வைக்க வேண்டும். மற்றவர்களுக்கு உயர்வு காத்திருக்கிறது.

விவசாயிகள்: நிலபுலன் சார்பாக நிம்மதியும் உற்பத்தி சார்ந்த லாபங்களும் அதிகரிக்கும்.

தொழிலதிபர்கள்: இலக்கு வைத்திருக்கும் அயலுார், அயல்மாநில, தொழில் திட்டங்கள் வெற்றிகரமாக முடியும்.

அனுகூல நட்சத்திரங்கள்: உத்திரம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், பூரட்டாதி, பரணி.

பரிகாரம்: நவக்கிரக ராகுவுக்கும், செவ்வாய்க்கும் பிரீதி பரிகாரம் செய்து, காளியம்மனை ராகு கால நேரத்தில் வழிபடவும்.

துலாம்

துலாம்

(சித்திரை 3ம் பாதம், ஸ்வாதி, விசாகம் 1, 2, 3ம் பாதம்)

அற்புதமான இனிமைகளை கொடுக்கப் போகிற மாதம். எப்போதுமே உங்கள் ராசிக்கு பங்குனி மாதம் வந்துவிட்டால் கொண்டாட்டம் தான். பாதகாதிபதியான சூரியன் மறைவு பெறுவதும், மற்ற கிரகங்கள் யோகமான இடத்தில் சஞ்சாரம் செய்வதும், ஏகப்பட்ட விசேஷ, உயர்வு அதிர்ஷ்ட லாபங்கள் கிடைக்கப் போகிறது.

எதிரி, எதிர்ப்பு, கடன் ஸ்தான அதிபதியாகிய குருபகவான் நீசமாகி சனியுடன் சேர்ந்து 4ம் இடத்தில் இருப்பதால், இம்மாதம் முழுவதும் தொட்டது துலங்கும், வைத்தது விளங்கும். ஆகவே தயக்கம் கொள்ளாமல் சுறுசுறுப்போடும் விழிப்போடும் இந்த மாதத்தை பயன்படுத்தினால் அற்புதமான உயர்வுகளை, ஆதாயங்களை அடைந்துவிட முடியும்.  கடன், கண்ணி வழக்கு, கொடு க்கல் வாங்கல் சமாச்சாரங்கள், நாணய விஷயங்கள், வாக்குறுதி நிலைப்பாடுகள் எல்லாவற்றுக்கும் புதிய திருப்பங்கள் ஏற்பட்டு, உன்னதமான வளர்ச்சி ஏற்படும்.

மருத்துவ விரயங்கள் சங்கடப்படுத்தாதது. உத்தியோகத்திலும் எதிர்பாராத உயர்வு, மாற்றங்கள் ஏற்படும். தொழில், வியாபார, நிர்வாக விஷயங்கள் நினைத்தபடியே லாபங்களுடன் நகரும்.

நிர்வாக இடத்தில் ஆள்பற்றாக்குறை சங்கடங்கள் விலகும். 2வது வாரம் முடிந்த பிறகு சொத்து பத்து ரீதியான, பூர்வீக சொத்து சம்பந்தமான வில்லங்க, விவகார, பஞ்சாயத்துகள் நல்லபடியாக முடிவுக்கு வரும். 

இம்மாத திங்கள், ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் செழிப்பும் உயர்தரப் பொருள் சேர்க்கையும் ஏற்படும். எதிர்பாராத பணவரவு உண்டு.

 இம்மாத 4, 5, 9, 14, 17, 20வது தினங்களில் ஆச்சரியப்படுகிற மிகப்பெரிய வளர்ச்சி, அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது.

பெண்கள்: 2வது வாரம் முடிவதற்குள் மனக் கவலை கள், குடும்ப ரீதியான குறைபாடுகள் அனைத்தும் விலகிவிடும்.

மாணவர்கள்: உயர்க்கல்வி ரீதியாக, அயலுார் கல்வி மற்றும் அது சார்ந்த உதவி, ஒத்துழைப்புகள் அமையும்.

விவசாயிகள்: சுவாதி மற்றும் சித்திரை நட்சத்திர க்காரர்களுக்கு 3வது வாரத்தில் லாபமும், புதிய நிலபுலன் சேர்க்கையும் உண்டு.

தொழிலதிபர்கள்: விசாகத்தினருக்கு பலவித லாபங்களும் புதிய பட்ஜெட் விஷயங்களில் அபரிமித சாதகங்களும் உண்டாகும்.

அனுகூல நட்சத்திரங்கள்: அனுஷம், மூலம், அவிட்டம், ரேவதி, பரணி, ரோகிணி, பூசம். 

பரிகாரம்: குருபகவானுக்கு செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் பிரீதி பரிகாரம் செய்து வழிபட்டப்பின், சிவபெருமானை தரிசனம் செய்யவும்.

விருச்சிகம்

விருச்சிகம்

(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு சூரியன், சுக்கிரன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் நகர்ச்சி அனைத்தும் சேர்ந்து சந்தோஷ வளர்ச்சிகளை அடுக்கடுக்காக கொடுக்கப் போகிற மாதம். எந்த தொந்தரவாக இருந்தாலும், அதனை மூன்றாமிடத்தில் அமர்ந்திருக்கிற சனிக்கிரகம் தீர்த்துவிட இருக்கிறது.

குடும்பச்சச்சரவு, பிணக்கு, கருத்து மோதல் அனைத்தையும் செவ்வாய்க்கிரகம் சரி செய்யும். ராசியில் உள்ள கேது மட்டும் இடையிடையே உங்களது மூளையை தேவையற்று குழப்பிக் கொண்டி ருக்கலாம். ஆனாலும் அவரை ராசிநாதன் பார்த்துக் கொண்டிருப்பதால் சச்சரவு ஏதும் ஏற்படாமல் நன்மையை மட்டுமே கொடுக்கப் போகிறார் கேது.

மருத்துவ விரயங்கள் ஏற்படாது. மாத முடிவுக்குள் பெரிய தொகை கைக்கு வந்து முக்கியமான சில பிரச்னைகளை, காரியங்களை பூர்த்தி செய்துவிடும். நாணய விஷயங்கள் பழுதுபடாது. கொடுக்கல் வாங்கலாலும் நன்மைகள் காத்துள்ளது.

உத்தியோகம், பொறுப்பு விஷயங்கள் மேன்மையடையும். புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும். தொழில், வியாபார முதலீடுகள் அதிர்ஷ்ட லாபங்களை தரப்போகிறது.

2வது வாரம் திடீர் அதிர்ஷ்டம் உண்டு. தடைபட்டு வரும் சுபகாரிய, திருமண சுப சடங்கு, குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். புத்திர பாக்கிய ஏக்கத்தில் உள்ள விசாக நட்சத்திர இளம் தம்பதியருக்கு நல்ல செய்தி கிடைக்கும். சனி, வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கைகளும், வண்டி, வாகன வசதிகளும் சேர்க்கையாகும்.

பெண்கள்: அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு மணவாழ்வு தொடர்பாக இனிமை ஏற்பட்டு, எந்த சச்சரவும் நெருங்காத மாதம்.

மாணவர்கள்: சகோதர, சகோதரிகளாலும், தாய்வழி உறவுகளாலும் மேன்மை, கல்விக்கான உதவி ஒத்து ழைப்பு கிடைக்கும்.

விவசாயிகள்: தொடர் லாபங்களும், இதுவரை அடைந்து வரும் நஷ்டங்களுக்கான தீர்வும் கிடைக்கும்.

தொழிலதிபர்கள்: 12வது தினத்துக்குப் பிறகு சந்தோஷ மேன்மைகளும் காரிய வெற்றிகளும் காத்திருக்கிறது.

அனுகூல நட்சத்திரங்கள்: பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, புனர்பூசம், பூரம், சுவாதி.

பரிகாரம்: நவக்கிரக சூரியனை ஞாயிற்றுக்கிழமை தோறும் 11 முறை வலம் வந்து வழிபட்டப்பின், சிவ வழிபாடு செய்யவும்.

தனுசு

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

6 கிரகங்கள் மிக அற்புதமான அதிர்ஷ்ட சாதகங்களுடன் சுழன்று கொண்டிருப்பதால், சவுகரிய அதிர்ஷ்ட மேன்மைகள் அடுக்கடுக்காக உண்டாகும். குடும்பத்தில் புதிய இனிமை, சந்தோஷ திருப்திகள் வளர இருக்கின்றன. ஆரோக்கிய நிலை தொந்தரவு தராது. வாழ்க்கைத்துணையுடன் அனுசரணை, அன்பு, ஆதரவு அதிகரிக்கும்.

பொருளாதார ரீதியான சங்கடங்களுக்கு முடிவு கிடைத்து வளர்ச்சி, சரளங்கள் ஏற்படும். முதல் வாரத்திலேயே பெரிய தொகைகள் கிடைக்கும். உத்தியோகம், பதவி விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி காணும். ஊதியப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். தொழில், நிர்வாக முதலீடு விஷயங்களில் இருக்கும் அதிருப்தி மாறி உயர்வு கிடைக்கும்.

கொடுக்கல், வாங்கல் நாணய விஷயங்கள் சீராக இருக்கும். கடன், கண்ணி விஷயங்கள் அமைதியாக நகரும். இம்மாதம் 10ம் தினத்திற்குப் பிறகு கோர்ட், போலீஸ் ரீதியான சச்சரவுகள், சங்கடங்கள் சாதக திருப்புமுனையை தரும்.

பூராட நட்சத்திர இளம் இருபாலருக்கும் திருமண விஷயங்கள் பூர்த்தியாகும். உத்திராட நட்சத்திரத்தினர் புதிய மனை, சொத்துபத்து, வாகனம் வாங்குவர். மூலம் நட்சத்திரத்தினருக்கு முதல் வாரம் கடந்த பிறகு கடன் பிரச்னை, பொருளாதார ரீதியான இடையூறுகள் சாதகமாகும்.

இம்மாத செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சவுகரிய உயர்வுகளும், அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். 3, 7, 10, 16, 18வது நாட்களில் சரளமான பணவரவு, காரிய பலிதம், ஆடை ஆபரண சேர்க்கைகள் களைகட்டப் போகிறது.

பெண்கள்: மூலம் நட்சத்திரத்தினருக்கு சுபிட்சங்கள் தொடர்ந்து, வாழ்க்கைத்துணையால் சந்தோஷம் வளரும்.

மாணவர்கள்: உயர்க்கல்வி ரீதியாக வைத்துள்ள இலக்கும், ஆசையும் பூர்த்தியாகும்.

விவசாயிகள்: இரட்டை லாப சந்தோஷங்கள் கிடைத்து, புதிய நில புலன்கள் வாங்கும் யோகம் உண்டு.

தொழிலதிபர்கள்: மிகப்பெரிய லாபம் ஒன்றும், கடந்த ஆண்டு நஷ்டங்களை ஈடுகட்டும் நிவர்த்தியும் ஏற்படும்.

அனுகூல நட்சத்திரங்கள்: உத்திராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, மிருகசீரிஷம், பூசம்.

பரிகாரம்: சனிக்கிழமைகளில் நவக்கிரக சனிபகவானுக்கும், சந்திரனுக்கும் அபிஷேக ஆராதனைகளை செய்து, அம்பாள் வழிபாடு செய்யவும்.

மகரம்

மகரம்

(உத்திராடம் 2, 3, 4ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2ம் பாதம்)

இம்மாதம் உங்கள் ராசிக்கு 3ல் சூரியனும், இவருக்கு சாதகமான இடத்தில் ராசிக்கு உண்டான யோகாதிபதிகளும் இருப்பதால் உன்னத உயர்வுகள், அதிர்ஷ்டங்கள் எந்த முயற்சியும் செய்யாமல் கிடைக்கப் போகிறது.

ஆரோக்கிய கோளாறுகள் எல்லாம் பறந்துவிடும். இல்லத்துக்குள் இனிமை, அமைதி தாண்டவமாடப் போகிறது. எதிலும் இரட்டை வெற்றி கிடைக்கும். உத்தியோக, பொறுப்பு விஷயங்களில் புதிய ஏற்றம் கிடைத்து ஊதிய சம்பந்தமான மேன்மைகளும் அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். தொழில், வியாபார பாதிப்புகள் இருக்காது. ஆள் பற்றாக்குறை முடிவுக்கு வந்துவிடும். கொடுக்கல். வாங்கல், வாக்குறுதி மற்றும் நாணய விஷயங்கள் சார்பாக ஏற்பட்ட மனசங்கடங்கள் தீரும்.

இந்த ராசி அவிட்ட நட்சத்திர இளம் தம்பதியர்களுக்கு புத்திர பாக்கிய கவலை தீர்ந்து அதிர்ஷ்டம் உண்டாகும். அயலுார், அயல்மாநில, தொழில் சம்பந்தப்பட்ட பெரிய பட்ஜெட் விஷயங்கள் நல்லபடியாக பூர்த்தியாகும். அரசாங்கம்,  வங்கி, மற்றபிற ஆவணங்கள் தொடர்பான நெருக்கடிகள் ஏற்பட்டுக் கொண்டிருப்பின் அவற்றுக்கு தீர்வு கிடைக்கும்.

திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு 3வது வாரத்தில் அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

உத்திராட நட்சத்திர இளம் இருபாலரும் மாதம் தொடங்கியதில் இருந்து 11 தினங்களுக்கு எல்லா விஷயத்திலும் சர்வ கவனத்துடன் இருப்பது அவசியம். அவிட்ட நட்சத்திர இளைஞர்கள் டூவீலர்களில் கூட்டுப் பயணத்தை தவிர்க்க வேண்டும். மற்றபடி மகர ராசிக்கு அநாவசிய பாதகங்கள் ஏதும் ஏற்படாது.

பொன், பொருள் சேர்க்கைகளும் காத்துள்ளது.

பெண்கள்: திருவோண நட்சத்திர இல்லத்தரசிகளுக்கு சவுகரிய மேன்மைகள், வாழ்க்கைத்துணை மூலம் சந்தோசங்கள் உண்டாகும்.

மாணவர்கள்: உயர்க்கல்வி ரீதியாக மனதுக்குள் நீடித்து வரும் பயமும், அச்சமும் விலகி சந்தோஷம் ஏற்படும். விவசாயிகள்: இடையூறு, நஷ்டங்களை சந்திக்காத அதிர்ஷ்ட வளர்ச்சி ஏற்படும்.

தொழிலதிபர்கள்: பெரிய பட்ஜெட் மற்றும் சாத்தியமில்லாத முதலீடுகளில் துணிச்சலாக இறங்க, லாபம் ஏற்படும்.

அனுகூல நட்சத்திரங்கள்: அவிட்டம், சதயம், ரேவதி, அஸ்வினி, ரோகிணி, பூசம், மகம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைகளில் விரதம் அனுஷ்டித்து, குருபகவானையும், சிவபெருமானையும் வழிபடவும்.

கும்பம்

கும்பம்

(அவிட்டம் 3, 4ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3ம் பாதம்)

மாதம் தொடங்கி 5 தினங்கள் வரை ராசிக்கு யோகாதிபதியான சுக்கிரனும், 5க்குடைய கிரகமான புதனும் ராசியில் நிற்கிறார்கள். இதனால் வசுமதி யோகம் ஏற்பட்டு அனைத்து சவுகரியங்களும் எளிதாக கைகூடும். ஆரோக்கிய நிலையில், சங்கடம், மருத்துவ விரயம், உடல்நலக் கோளாறு இருப்பின் ராசிநாதன் குருவுடன் சேர்ந்து இருப்பதால் சரியாகிவிடும்.

இல்ல ஒற்றுமைக்கு பங்கம் இல்லை. உறவுகள் ரீதியாக மன மகிழ்ச்சியான சம்பவங்களே தொடரப் போகிறது. வாழ்க்கைத்துணையுடனான கருத்து, பனிப்போர் சரியாகிவிடும்.

2வது வாரம் முடிவதற்குள் எதிர்பாராத தொகைகள் எந்த ரூபத்திலோ கைக்கு வரப்போகிறது. உத்தியோகம், பொறுப்பு, பதவி விஷயங்கள், சக ஊழியர்களால் ஏற்பட்டுள்ள அநாவசிய தொந்தரவுகள் நீங்கி  உயர்வைத் தரப்போகிறது. சொத்துபத்து சம்பந்தமாகவும், பூர்வீக சொத்தில் ஏற்பட்டுள்ள உரிமை பிரச்னைகள் காரணமாகவும், தொழில், நிர்வாக விஷய நிறுத்தங்கள் தொடர்பாக அல்லாடி வருகிற இந்த ராசியினருக்கு இம்மாதம் தொடங்கி 12வது தினம் முடிவதற்குள் நிவர்த்தியாகி நிம்மதியும், திருப்தியும் சந்தோஷமான ஏற்படும். திருமண, சுபகாரிய விஷயங்கள் திட்ட மிட்டதுபோல் விமரிசையாக நடந்து முடியும். கோர்ட், போலீஸ் பஞ்சாயத்து, வழக்கு சமாச்சாரங்கள் 3வது வார இறுதிக்குள் சாதகமாகும்.

பூரட்டாதி மற்றும் சதய நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. அவிட்ட நட்சத்திர வயது கடந்த நபர்கள் மருந்து, மாத்திரை விஷயங்களிலும் உணவு பழக்க வழக்கத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.

இம்மாத வியாழன், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சுபிட்ச வளர்ச்சி, உயர்தர உடமைகள், பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும்.

பெண்கள்: குடும்பத்துக்கென அற்புத, சந்தோஷ வளர்ச்சிகள் ஏற்படும்.

மாணவர்கள்: சதயம் நட்சத்தி ரக்காரர்களுக்கு உயர்க்கல்விக்கான அஸ்திவாரம் மிக எளிதாக ஏற்படும்.

விவசாயிகள்: உற்பத்தி சார்பான தடை இடையூறுகள் விலகி திருப்தியான லாபம் ஏற்படும்.

தொழிலதிபர்கள்: கூட்டணி தொழில் தொடர்பான முயற்சிகள் பலிதமாகி அதற்கான பொருளாதாரம் கிடைத்துவிடும்.

அனுகூல நட்சத்திரங்கள்: ரேவதி, அஸ்வினி, பரணி, திருவாதிரை, பூசம், விசாகம், அனுஷம்.

பரிகாரம்: நவக்கிரக ராகுவையும், கேதுவையும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால நேரத்தில் பிரீதி பரிகாரம் செய்து வழிபடவும்.

மீனம்

மீனம்

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

இந்த மாதம் உங்கள் ராசிக்கு 6க்குடையவரும், 8க்குடையவரும் அதாவது சூரியனும் சுக்கிரனும் ராசிக்குள் இணைகின்றனர். ராசிநாதன் லாபாதிபதி இணைந்து லாப ஸ்தானத்தில் நிற்கிற நிலை, 3ம் இட செவ்வாய், ராகு கூட்டணி காரணங்களால் சவுகரிய, அதிர்ஷ்ட இனிமைகள் உண்டாகும்.

ஆசைப்பட்டுள்ள குடும்ப சமாச்சாரங்கள் எளிதாக பூர்த்தியாகும். வாழ்க்கைத் துணையோடு அன்யோன்யம், அன்பு, அனுசரணை அதிகரிக்கும். குடும்ப உயர்வு சார்பான ஏற்பாடுகள் நல்லபடியாக நிறைவேறிவிடும். பணத்தட்டுப்பாடு தீரும்.

பணி, பொறுப்பு விஷயங்களில் வளர்ச்சிகள் வந்த வண்ணம் இருக்கும். ஊதிய நிலுவைகளும் கைக்கு கிடைத்து குதுாகலப்படுத்தும். வாரிசுகளின் திருமணம் போன்ற சுப விஷய ஏற்பாடுகள் எளிதாக பூர்த்தியாகும்.

தொழில், வியாபார, நிர்வாக விஷயங்கள் 2வது வாரம் முடிந்த பிறகு வளர்ச்சி, சந்தோஷங்களை லாபத்துடன் கொடுக்கும். கடன், கண்ணி, வம்பு, வழக்கு பஞ்சாயத்து, கோர்ட் பிரச்னைகள் இம்மாத 21ம் தினத்துக்குப் பிறகு சாதகமாக திரும்பும். புத்திர பாக்கிய ஏக்கத்தில் உள்ள இந்த ராசியினருக்கு சந்தோஷ இனிமைகள் ஏற்படும்.

இம்மாத சனி, செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் உயர்வு, திருப்புமுனைகள் உண்டு. 2, 6, 7, 14, 18, 25வது தினங்களில் உயர்வுகளும், உயர்தரப் பொருட்களும், சொத்துபத்து சேர்க்கை, ஆடை, ஆபரண, வாகன விருத்திகள் ஏற்படும்.

மொத்தத்தில் மீன ராசியினருக்கு பல மாதங்களுக்குப் பிறகு அதிர்ஷ்டக் காற்று அடிக்க ஆரம்பித்திருக்கிறது.

பெண்கள்: ரேவதியினருக்கு 7 மாதங்களுக்குப் பிறகு மனநிறைவான சந்தோஷம் தொடங்க இருக்கிறது. 

மாணவர்கள்: பூரட்டாதியினருக்கு உயர்க்கல்வி சார்பாக குடும்பத்தரால் மிகப்பெரிய சவுகரிய மேன்மைகள் உண்டாகும்.

விவசாயிகள்: நிலபுலன்கள், நுணுக்க உற்பத்தி சார்பாக நினைத்ததெல்லாம்  நிறைவேறும். 

தொழிலதிபர்கள்: பெரிய தொகை ரீதியாக தடுமாற்றம் இல்லாமல் தொழில் சார்ந்த விஷயங்களில் வெற்றி உண்டாகும்.

அனுகூல நட்சத்திரங்கள்: ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம், அனுஷம்.

பரிகாரம்: நவக்கிரக சுக்கிரனுக்கு பிரீதி செய்துகொண்டு, தொடர்ந்து 11 தினங்கள் மகாலட்சுமியை வழிபடவும்.