தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடங்குகிறது

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 21:01

சென்னை,

தமிழகத்தில் மேலும் 7 இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி நடத்த தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது.

தொல்லியத் துறை கமிஷனரும், தலைமைச் செயலருமான டி. உதயசந்திரன் இது குறித்த தகவல்களை வெளியிட்டு உள்ளார். மத்திய தொல்லியல் துறை ஆலோசனை வாரியம் (சி.ஏ.பீ.ஏ) கடந்த 5ம் தேதி புதிதாக 7 இடங்களில் தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை நடத்த பரிந்துரை செய்துள்ளது. இதனால், தமிழகத்தில் முதன் முறையாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் தொல்லியல் அகழ் ஆய்வுகள் நடைபெற உள்ளன. மாநில தொல்லியல் துறை, பல்வேறு பல்கலைக்கழகங்கள் உள்பட பல அமைப்புகள் இதனை மேற்கொள்ள உள்ளன.

தமிழகத்தில் இந்த ஆண்டு தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளை நடத்த ரூ. 3 கோடியை மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கீழடி மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் ஆய்வு நடைபெறும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் அதனைச் சுற்றி உள்ள பகுதி, சிவகளை மற்றும் அதன் சுற்று வட்ட பகுதி, கொற்கை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் நடக்க உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொடுமணல் பகுதியில் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறையிலும் நடத்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் மாளிகைமேடு ஆகிய பகுதிகளில் தொல்லியல் அகழ்வாராய்ச்சி நடத்தப்பட இருப்பதாக உதயசந்திரன் தெரிவித்தார்.

தாமிரபரணி நதி நாகரிகத்தை நிறுவும் வகையில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியில் கள ஆய்வு நடத்தப்பட உள்ளது. புதிய கற்கால இடங்களை கண்டறிய மற்றொரு கள ஆய்வு கிருஷ்ணகிரி, வேலூர், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட இருப்பதாக உதயசந்திரன் கூறினார்.  

தமிழர்களின் தொன்மையான கலாச்சார பெருமைகளை அறிவியல் முறையில் நிலைநிறுத்த இந்த தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளும், கள ஆய்வுகளும் முக்கிய மைல் கல்லாக அமையும் என்று உதயசந்திரன் தெரிவித்தார்.