சபரிமலை மகரவிளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் தேவஸ்தான தலைவர் வாசு தகவல்

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 19:59

நடப்பு மண்டல மகர விளக்கு சீசனில் கடந்த 54 நாட்களில் சபரிமலையில்.  1.32 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து இருப்பதாக திருவிதாம் கூர் தேவஸ்தான தலைவர் வாசு தெரிவித்தார்.

சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை நடக்கிறது. இதையொட்டி நேற்று சபரிமலையில் வாசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

மகர விளக்கு பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது. அனைவரின் ஒருமித்த பங்களிப்புடன் இந்த மண்டல, மகர விளக்கு சீசன் நிறைவாக நிறைவு பெறும் கட்டத்திற்கு வந்து உள்ளது. கொரோனா காரண மாக பல்வேறு பிரச்சினைகள் தொற்றிக் கொண்ட போதிலும் அரசின் உதவியால் நடப்பு மண்டல மகர விளக்கு பயணம் சிறப்பாக அமைந்தது. நடப்பு சீசனில் இது வரை,  நடை திறக்கப்பட்டு 54 நாட்களில் 1 லட்சத்து 32 ஆயிரத்து 673 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் 16 கோடியே 32 லட்சத்து 673 ரூபாய் வருமானம் கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு மண்டல சீசனில் ரூ 166 கோடி வருமானம் கிடைத்து இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதில் 6 சதவீதம் மட்டுமே வருவாயாக கிடைத்து உள்ளது. கடந்த ஆண்டு மகர விளக்க்கையொட்டி டிசம்பர் 31 முதல் ஜனவரி 12-ந் தேதி வரை ரூ. 60 கோடி வருமானம் கிடைத்து இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ. 6.33 கோடி மட்டுமே வருமானம் வந்துள்ளது. தற்போதுள்ள நிலையினை கருத்தில் கொண்டு அரசு கடந்த 6 மாத காலத்தில் ௹. 70 கோடி மானியமாக வழங்கியது. மேலும் ரூ  100 கோடி நிதி அரசு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிதாம் கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 1250 கோவில்கள் உள்ளன. இதில் 50 கோவில்களில் மட்டுமே நிலையான வருமானம் கிடைத்து வருகிறது. சபரிமலையின் வருமானத்தை நம்பியே மற்ற கோவில்கள் இயங்கி வருகின்றன. 2021-ம் ஆண்டுக்கான ஹரிவராசனம் விருது பிரபல இசை கலைஞர் வீரமணி ராஜுவிற்கு இன்று வழங்கப்படுகறது. சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் காலை 8 மணிக்கு நடைபெறும் விழாவில் மந்திரி கடகம் பள்ளி சுரேந்திரன் விருதை வழங்கி கவுரவிப்பார். விழாவிற்கு ராஜு ஆபிரகாம் எம்.எல் ஏ தலைமை தாங்குகிறார். இந்த விழாவில் தேவஸ்தான தலைவர், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது தேவஸ்தான உறுப்பினர் தங்கப்பன், கமிஷனர் பி.எஸ் திருமேனி ஆகியோர் உடன் இருந்தனர்.