அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் ஏற்பு; இன்று வாக்கெடுப்பு

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2021 15:21

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய அரசியலமைப்பு சட்டம் 25வது திருத்தத்தை கொண்டு வரக் கோரும் தீர்மானம் செவ்வாய் கிழமை பிரதிநிதிகள் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. இன்று (புதன்கிழமை) இதற்கான வாக்கெடுப்பு நடக்கிறது.

நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்ய, கடந்த புதன்கிழமை நாடாளுமன்றம் கூடியது. அப்போது, தேர்தலில் தோல்வி அடைந்த டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். டிரம்ப், தனது பேச்சுக்கள் மூலமாக ஆதரவாளர்களைத் தூண்டி வன்முறையில் ஈடுபடச்செய்தார். இந்த வன்முறையில் ஒரு போலீஸ்காரர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து டொனால்ட் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறினார். ஆனால், டிரம்ப் அதைப் பற்றி கவலைப்பட வில்லை.

இந்நிலையில் அவரைப் பதவி நீக்கம் செய்ய பைடனின் ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முயற்சித்து வருகின்றனர். அவர்கள் பிரதிநிதிகள் சபையில் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். அதில் துணை அதிபர் மைக் பென்ஸ், தனது அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி 25வது திருத்தத்தை செயல்படுத்த வேண்டும் என்று கோரி இருந்தது. இந்த அரசியலமைப்பு சட்டம் 25வது திருத்தம், அதிபர் ஒருவர் தனது பதவிக்கான அதிகாரம் மற்றும் கடமைகளை செயல்படுத்த இயலாதவராக இருந்தால், அவரைப் பதவி நீக்கம் செய்ய வழி வகுக்கிறது.

பிரதிநிதிகள் சபை உறுப்பினர் ஜேமி ரஸ்கின் தலைமையில் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. டிரம்பின் குடியரசுக் கட்சி பிரதிநிதி ஆடம் கிங்சிங்கெர், இந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்தார்.

சில குடியரசுக் கட்சி பிரதிநிதிகள், பதவி நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர், டிரம்பின் செயல் கண்டிக்க தக்கது என ஏற்றுக் கொண்டனர். ஆனால், பதவி காலம் முடியும் நேரத்தில் இந்த பதவி நீக்க நடவடிக்கை தேவை இல்லை என்று குறிப்பிட்டனர்.

இந்த தீர்மானத்தின் மீது, நாடாளுமன்றத்தில் இன்று வாக்கெடுப்பு நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.