இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை 74 % உயர்த்த மத்திய அரசு ஆலோசனை

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2021 19:47

புதுடெல்லி,

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு அளவை 74 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது. தற்போது இந்த துறையில் அன்னிய முதலீட்டு அளவு 49 சதவீதமாக உள்ளது.

தனியார் வங்கித் துறையில் உள்ளது போல், இன்சூரன்ஸ் மற்றும் பென்சன் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 74 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2019ம் ஆண்டு பட்ஜெட் உரையில் இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதற்கான வழிகள் கண்டறியப்படும் என்று கூறினார். இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையமும் (ஐ.ஆர்.டீ.ஏ.ஐ) அதற்கு ஆதரவு தெரிவித்தது.

2020-21ம் ஆண்டின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அரசு அதிகரிக்க உள்ளது. இதனைச் செய்ய இன்சூரன்ஸ் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை உயர்த்துவதன் மூலம், இந்த துறையில் அதிக முதலீடுகள் குவியும். இதனால், வர்த்தகம் பெருகும். இது அரசின் முதலீட்டு குறைப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது.