புதுடெல்லி,
2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வங்கிகளின் மொத்த செயற்படா சொத்துக்களின் மதிப்பு 13.5 சதவீதம் வரை உயரலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அரையாண்டு நிதி நிலைத்தன்மை அறிக்கையை (எப்.எஸ்.ஆர்) வெளியிட்டு உள்ளது. அதில் நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் மாதத்துடன் முடிவடையும் 6 மாதங்கள் கணக்கிடப்பட்டு உள்ளது.
வங்கிகளின் மொத்த செயற்படா சொத்துக்களின் மதிப்பு, வரும் செப்டம்பர் மாத வாக்கில் 13.5 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று ஆர்பிஐ கணக்கிட்டு உள்ளது. பேரினப் பொருளாதார சூழல் மேலும் மோசமடைந்தால், இது 14.8 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இது 7.5 சதவீதமாக இருக்கிறது.
பொதுத்துறை வங்கிகளின் மொத்த செயற்படா சொத்து மதிப்பு, செப்டம்பர் 2020ல் 9.7 சதவீதம் ஆக இருந்தது. இது 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 16.2 சதவீதமாக அதிகரிக்கக் கூடும். தனியார் வங்கிகளைப் பொறுத்தவரை, 4.6 சதவீதமாக இருக்கும் மொத்த செயற்படா சொத்து மதிப்பு 2021 செப்டம்பரில் 7.9 சதவீதமாக அதிகரிக்கலாம். வெளிநாட்டு வங்கிகளைப் பொறுத்தவரை 2020 செப்டம்பரில் 2.5 சதவீதமாக இருந்து 5.4 அதிகரிக்கலாம் என்று ஆர்பிஐ கணித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகள் இதில் மோசமாக பாதிக்கப்படக் கூடும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.