புதுடெல்லி
மத்திய அரசு இயற்றிய 3 விவசாய சட்டங்களைத் தற்காலிகமாக ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்தது.
டெல்லி எல்லையில் 1 மாத காலத்திற்கு மேலாக போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் பிரச்சனையைப் புரிந்து கொண்டு நடவடிக்கை எடுப்பதற்கு உதவியாக கமிட்டி ஒன்றை நியமிப்பதாக உச்சநீதிமன்றம் செவ்வாய் (12-1-2021) அன்று அறிவித்தது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொப்தே தலைமையிலான 3 உறுப்பினர் கொண்ட நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவுகளை இன்று பிறப்பித்தது.
உச்சநீதிமன்றம் நியமிக்கும் கமிட்டியின் நடவடிக்கைகளில் தனிப்பட்ட முறையில் விவசாயிகளோ, விவசாயிகளின் சங்கங்களோ பங்கு கொள்ளாது என்று விவசாயிகளின் சங்கங்கள் திங்களன்று இரவு அறிக்கை வெளியிட்ட போதிலும், உச்சநீதிமன்றம் கமிட்டி நியமிப்பதாக செவ்வாயன்று அறிவித்தது. சுயேச்சையான கமிட்டி நியமிப்பதை எந்த சக்தியும் தடை செய்ய முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பொப்தே தெரிவித்தார். பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விரும்புகிறது. போராட்டக் களத்தில் நிலவும் சூழ்நிலை என்ன என்று புரிந்து கொள்ள உச்சநீதிமன்றம் விரும்புகிறது. இதில் அரசியல் எதுவும் கிடையாது. நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீண்டும் செவ்வாயன்று விவசாயிகளின் சங்கங்கள் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்ட வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
விவசாயிகளின் பிரச்சனைக்கு உண்மையாக தீர்வு காண விரும்புகிறேன் அனைவரும் உச்சநீதிமன்றம் நியமித்த கமிட்டி முன் ஆஜராகி தங்கள் கருத்தை வெளிப்படுத்த வேண்டுமென்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பொப்தே கேட்டுக்கொண்டார்.
பாரதிய கிசான் சங்கத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வி சிதம்பரிஷ் கமிட்டியின் நடவடிக்கைகளில் தங்கள் சங்கம் பங்கு கொள்ளும் என்று கூறினார். மத்திய அரசு இயற்றிய விவசாய சட்டங்களினால் நாங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு என்றும் உறுதி செய்யப்பட வேண்டும் என்று எங்கள் சங்கம் விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.
நான்கு உறுப்பினர் கமிட்டி
உச்சநீதிமன்றம் இன்றைய தனது உத்தரவில் கமிட்டிக்கு நியமிக்கப்படும் 4 பிரமுகர்கள் யார் யார் என்றும் அறிவித்தது.
1. பூபிந்தர் சிங் மான் தலைவர் பாரதிய கிசான் யூனியன்
2. டாக்டர் பிரமோத் குமார் ஜோஷி - முன்னாள் ஐஏஎஸ் சிஆர்ஐ.
3. அசோக் குலாதி. வேளாண் பொருளாதார நிபுணர்.
4. அனில் கன்வத். ஷேத்காரி சங்காதனா விவசாயிகள் அமைப்பு - மகாராஷ்டிரா