கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, மு.க. ஸ்டாலின், ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தி

பதிவு செய்த நாள் : 24 டிசம்பர் 2020 14:07

 சென்னை, 

உலகெங்கும் டிசம்பர் 25ம் தேதி இயேசுபிரான் அவதரித்த தினமான கிறிஸ்துமஸ்  திருநாள் கொண்டாடப்படவுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் ஆகியோர் கிறிஸ்துமஸ்  வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மு.க. ஸ்டாலின் வாழ்த்து

கொரோனா கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் கிறிஸ்துமஸ் திருாளை கொண்டாடுமாறு மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்

திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் வெளியிட்ட  கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி:

கிறிஸ்துவ சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திமுக சார்பில் எனது மனமார்ந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள், ஏழை- எளிய மக்களுக்கு கருணையுள்ளத்துடன் உதவிடும் ஒரு மிக முக்கியமான உன்னதத் திருவிழா - இனிய திருவிழா! ஏழைகளுக்கும் - அடக்கப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பாரபட்சமின்றி உதவிக்கரம் நீட்டி, கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருநாள் ஒரு மாபெரும் மனித நேயத் திருவிழா. தமிழ்நாட்டின் அடிப்படைக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரைக்கும் - ஏன், கிராமங்கள் முதல் மாநகரம் வரை மிகச்சிறந்த சுகாதாரத் தேவைகளுக்கும் உரிய உட்கட்டமைப்புகளை உருவாக்கி - இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்குக் கிறிஸ்துவ சமுதாயத்தைச் சேர்ந்த ஆன்றோரும் சான்றோரும் ஆற்றிய - இன்னும் ஆற்றி வருகின்ற அரும்பணிகள் போற்றத்தக்கது - அனைவராலும் பாராட்டத்தக்கது.கொரோனா கால பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிவோம் என்று கிறிஸ்துவர்களுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


ராமதாஸ் வாழ்த்து

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி

இன்று உலகம் அன்பு பற்றாக்குறையும், வெறுப்பு உபரியும் தான் காணப்படுகிறது. இந்த நோய்களுக்கு சிறந்த மருந்து இயேசுபிரானின் போதனைகள் தான்.  அந்த மருந்தை அனைவரும் உட்கொள்வது கட்டாயம் ஆகும்.இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில்  அனைவரும் உறுதி ஏற்போம் என்று கூறி எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 இவ்வாறு, வாழ்த்து செய்தியில் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்,


காதர்மொய்தீன் வாழ்த்து

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் வெளியிட்ட வாழ்த்து செய்தியில்

கிறிஸ்துமஸ் கொண்டாடும் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயம்நிறைந்த இனிய வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக காதர்மொய்தீன்  வாழ்த்து கூறியுள்ளார்,