9 மாநிலங்களில் ‘கேலோ’ இந்தியா சிறப்பு மையம்: தமிழகத்துக்கு வாய்ப்பில்லை

பதிவு செய்த நாள் : 18 அக்டோபர் 2020 11:01

புது டில்லி

2 யூனியன் பிரதேசங்கள் உள்பட 7  மாநிலங்களில் ‘கேலோ’ இந்தியா மாநில சிறப்பு மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார். இந்த பட்டியலிலும் தமிழ்நாடு இடம் பெறவில்லை.

விளையாட்டில் திறமை உள்ள வீரர்களை இளம் வயதிலேயே கண்டறிந்து பயிற்சி அளிப்பதற்காக ‘கேலோ’ இந்தியா என்ற திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தேசிய அளவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஒரு வலுவான விளையாட்டுச் சூழல் அமைப்பை உருவாக்கும் முயற்சியாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்களை ( Khelo India State Centre of Excellence - KISCE) உருவாக்க இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் முடிவு செய்தது.

மாநிலங்களில் ஏற்கனவே உள்ள விளையாட்டு பயிற்சி மையங்களை, கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்களாக உலகத்தரத்திற்கு மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

மேம்படுத்தப்படும் இந்த மையங்களில்  திறமை மிகுந்த பயிற்சியாளர்கள் மற்றும் உதவி புரிவதற்கான ஊழியர்களை கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசே நியமிக்கும்.

அதைப்போல விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்கும்.

வீரர்களுக்கான உணவு, உறைவிட பராமரிப்புகளை மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.

இந்த திட்டத்தின்படி முதல் கட்டமாக கேரளா, கர்நாடகா, ஒடிசா, தெலுங்கானா, மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், மிசோரம், நாகலாந்து ஆகிய 8 மாநிலங்களில் உள்ள விளையாட்டு பயிற்சி மையங்கள் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டன.

2-வது முறையில் அசாம், மத்தியப் பிரதேசம், மேகாலயா, சிக்கிம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும், தாத்ரா நாகர்வேலி மற்றும் டாமன் டையு ஆகிய யூனியன் பிரதேசங்களும் தேர்வு செய்யப்பட்டன.

தற்போது 3-வது தவணையாக 2 யூனியன் பிரதேசங்கள் உள்பட மேலும் 9 மாநிலங்களில் கேலோ இந்தியா மாநில சிறப்பு மையங்கள் அமைக்கப்பட இருப்பதாக, மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார்.

ஆந்திரா, சத்தீஷ்கார், சண்டிகர், கோவா, அரியானா, இமாச்சல பிரதேசம், திரிபுரா ஆகிய 7 மாநிலங்களும், புதுச்சேரி, ஜம்மு-காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களும் 3வது தவணைப் பட்டியலில் இடம் பெற்று உள்ளன.

இத்துடன் மொத்தம் 20 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 24 சிறப்பு விளயாட்டு மையங்கள் அமைய உள்ளன. ஆனால் தமிழ்நாடு அதில் இடம்பெறவில்லை.

விளையாட்டு பயிற்சிக்கான போதிய இடம் இல்லாமல் ‘சாய் சப்சென்டர்’ திட்டம் தமிழ்நாட்டிற்கு கிடைக்காமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.