ஜிஎஸ்டி வருமான குறைவை ஈடுகட்ட மத்திய அரசு 1.1 லட்சம் கோடி கடனாக பெற முடிவு

பதிவு செய்த நாள் : 16 அக்டோபர் 2020 17:30

புதுடில்லி,

ஜிஎஸ்டி வருமான குறைவை ஈடுகட்ட 1.1 லட்சம் கோடி சந்தையில் கடனாகப் பெற்று மாநில அரசுகளுக்கு வழங்குவதென்று அக்டோபர் 15ம் தேதி வியாழக்கிழமை மத்திய அரசு திடீரென்று எதிர்பாராத முடிவினை எடுத்துள்ளது.மத்திய அரசு வாங்கும் கடன் அதன் நிதிப் பற்றாக்குறையில் சேராது. ஆனால் அதே சமயம் மாநில அரசுகளின் மூலதன வரவு கணக்கு சேரும் என்று மத்திய நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

ஜிஎஸ்டிவருமானக் குறைவை மாநிலங்களுக்கு எப்படி ஈடு செய்வது என்பது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் இறுதி முடிவு எடுக்க முடியவில்லை.

சிஎஸ்சி வருமானக் குறைவு வீடு கட்டுவதற்காக செஸ் வரி விதிக்க ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் இடம் உள்ளது. அவ்வாறு குவிக்கப்பட்ட செஸ் வரி மூலம் கிடைக்கும் வருமானமும் பொருளாதார சரிவு காரணமாக குறைந்துவிட்டது.

அத்துடன் கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தியில் தேக்கம் அடைந்தது.

இந்நிலையில் மத்திய அரசு தன்னுடைய பொது கணக்கிலிருந்து மாநிலங்களுக்கு இழப்பீட்டை ஈடு செய்யக்கூடாது என்று மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா தெரிவித்தார்.

மாநில அரசுகள் இழப்பு குறைவை ஈடுகட்ட சந்தையில் நேரடியாக கடன் வாங்கலாம் என்றும் அதற்கு ரிசர்வ் வங்கி மூலமாக மத்திய அரசு உதவி செய்யும் என்றும் திட்டமிடப்பட்டது. இதனடிப்படையில் 2 கடன் திட்டங்களை மாநிலங்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பரிந்துரை செய்தார்.இந்த இரண்டு திட்டங்களையும் 9 மாநிலங்கள் நிராகரித்து விட்டன.

ஜிஎஸ்டி சட்டத்தின்கீழ் சிஎஸ்சி வருமானக் குறைவு மாநிலங்களுக்கு ஈடு செய்ய வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும். எனவே இப்பொழுது மத்திய அரசு கடன் வாங்கி மாநிலங்களுக்கு அந்த தொகையை வழங்க வேண்டும் என்று அந்த மாநிலங்கள் வாதிட்டனர்.

ஏற்கனவே மாநிலங்களில் நிதி நிலைமை சரியில்லாத நிலையில் தவித்துக் கொண்டிருந்தன இந்நிலையில் மேலும் சந்தையில் கடன் வாங்குவது கடன்சுமை அதிகரிக்க உதவும் மாநிலங்களுக்கு பொருளாதாரரீதியாக பயன்படாது என்று அவை வாதிட்டன.

மத்திய அரசு நிலையில் மாற்றம் எதனையும் தெரிவிக்கவில்லை.மத்திய அரசு அறிவித்த கடன் திட்டத்தின்படி கடன் சந்தையில் வாங்க தயாராக இருப்பதாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

அதன் காரணமாக தமிழக அரசு சந்தையில் 9,500 கோடி ரூபாய் கூடுதல்கடனாக வாங்குவதற்கு மத்திய அரசு புதன்கிழமையன்று அனுமதி வழங்கியது.

இந்தப் பின்னணியில் திடீரென்று மத்திய அரசு தன் நிலையை மாற்றிக் கொண்டு மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படவேண்டிய 1.1 லட்சம் கோடியை கடனாக வாங்கி அப்படியே மாநில அரசுகளின் கணக்குக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.

இந்தக் கடன் மத்திய அரசு கணக்கில் வராது மாநிலங்களுக்கு மூலதன கடன் கணக்கில் வரவாக அமையும். சந்தையில் வாங்கும் இந்த கடன் தொகையை செஸ் வரி வசூலிக்கும் காலத்தை நீட்டிப்பதன்மூலம் செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

ப.சிதம்பரம் வரவேற்பு

மத்திய அரசு தன் நிலையை மாற்றிக் கொண்டிருப்பது வரவேற்பதாக மத்திய அரசின் முன்னாள் நிதியமைச்சர் பா சிதம்பரம் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி மாநிலங்களுக்கு சென்று சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசுதான் கடனாகப் பெற்று தர வேண்டும் என்று உறுதியாக இருந்தது.

இந்த நிலையை ஆதரித்த பொருளாதார நிபுணர்கள் கல்வியாளர்கள் பத்திரிக்கை ஆசிரியர்களுக்கு காங்கிரஸ் சார்பில் நன்றி தெரிவிக்கிறேன் என்று பா சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கேரளா வரவேற்பு

மாநில அரசுகளுக்கு வழங்கப்படவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு கடனாக பெற்று மாநிலங்களுக்கு வழங்குவது என்று எடுத்த முடிவை கேரள அரசு வரவேற்கிறது.

ஆனால் இதில் இன்னொரு பிரச்சனை உள்ளது. எல்லா மாநிலங்களுக்கும் ஒட்டுமொத்தமாக வரவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையின் அளவு 2.3 லட்சம் கோடி. இந்த இந்தத் தொகை முழுக்க மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கேரள அரசு விரும்புகிறது.

மத்திய அரசு எவ்வளவு தொகையை கடனாக பெற்று மாநிலங்களுக்கு வழங்க உள்ளது என்ற தகவல் இன்னும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. அந்த விஷயத்தை மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று என்று விரும்புவதாக கேரள நிதியமைச்சர் தாமஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.