டாடா கன்சல்டன்சி சர்வீஸ் ரூ.16,000 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்ப வாங்க முடிவு

பதிவு செய்த நாள் : 08 அக்டோபர் 2020 20:52

மும்பை,

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) தன் பங்குதாரர்களுக்கு மூலதனத்தை திருப்பித் தர ரூ.16,000 கோடிக்கு தன் பங்குகளை மீண்டும் வாங்க முடிவெடுத்துள்ளது. 

புதன்கிழமை நடந்த டி.சி.எஸ் நிறுவனத்தின் நிர்வாக குழு கூட்டத்தில் ஒரு பங்குக்கு ரூ.3000 என்ற வகையில் 5.3 கோடி பங்குகளை திரும்ப வாங்க முடிவெடுக்கப்பட்டது.

டி.சிஎஸ்-இன் மிக பெரிய பங்குதாரரான  டாடா சன்ஸ் நிறுவனம் இந்த திட்டத்தின் மிகப்பெரிய பயனாளியாக இருக்கும்.

டாடா சன்ஸ் நிறுவனம் டி.சி.எஸ்ஸில் 72 சதவீத பங்குகள் கொண்டுள்ளது. இந்த பங்குகளை டி.சி.எஸ்க்கு விற்பதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனம் சுமார் 11,500 கோடி ரூபாய் பெறும்.

இந்த தொகை டாடா சன்ஸ் நிறுவனத்தின் நிதி கையகப்படுத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளுக்கு உதவும். உதாரணமாக டாடா சன்ஸ் நிறுவனம் தற்போது ஏர் ஏசியா இந்தியாவை மறுசீரமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. மேலும் ஏர் இந்தியாவுக்கான பங்குகளை வாங்குவது குறித்தும் பரிசீலித்து வருகின்றது.

மேலும் டி.சி.எஸ் நிறுவனம் ஒரு பங்குக்கு ரூ.12 ஈவு தொகையாக அறிவித்துள்ளது. இதன் மூலம் டாடா சன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.324 கோடி கிடைக்கும்.