ஐபிஎல் தொடர் நாளை துவக்கம் : முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மோதல்

பதிவு செய்த நாள் : 18 செப்டம்பர் 2020 19:41

புதுடில்லி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நாளை (சனிக்கிழமை) ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்குகின்றன. அபுதாபியில் நாளை நடக்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பிரபலமான ஐபிஎல் தொடர் கொரோனா வைரஸ் காரணமாக இந்த வருடம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது.

செப்டம்பர் 19ம் தேதி (நாளை) முதல் துவங்கி வரும் நவம்பர் 10ம் தேதி வரை அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் நடைபெறுகின்றது. அதற்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.

முதல் போட்டியில் நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதிக்கொள்ளும் போட்டிகள் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு நிகரானது. இதுவரை நடந்த 12 சீசன்களிலும் சென்னை மற்றும் மும்பை அணிகள் நேருக்கு நேர் 30 முறை மோதியுள்ளன. மும்பை 18 முறையும், சென்னை அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளனர்.

இறுதிப் போட்டியில் மூன்று முறை மோதியுள்ளன. அதில் ஒரு முறை சென்னை அணியும், 2 முறையும் மும்பை அணியும் வென்றுள்ளன. கோப்பையை பொறுத்தவரை மும்பை அணி 4 முறையும் சென்னை அணி 3 முறையும் வென்றுள்ளன.  அதனால் நாளை நடைபெறும் முதல் போட்டியை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.