தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை

பதிவு செய்த நாள் : 18 ஆகஸ்ட் 2020 16:37

சென்னை

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலு பெயரை கேல் ரத்னா விருதுக்கு தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஆகும்.

இந்த விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை சம்பந்தப்பட்ட விளையாட்டு சம்மேளனங்கள் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்கின்றன.

அந்தவகையில், பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது வழங்க தேர்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோரின் பெயர்களையும் கேல் ரத்னா விருது வழங்க தேர்வுக்குழு பரிந்துரைத்துள்ளது.

2016ம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் 1.89 மீட்டர் உயரம் தாண்டி முதல் இடம் பிடித்து, தமிழ்நாடு – சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு, தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.