ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டித் தொடர்: மத்திய அரசு ஒப்புதல், சென்னை அணி ஆகஸ்டு 22ல் பயணம்

பதிவு செய்த நாள் : 07 ஆகஸ்ட் 2020 21:12

புதுடெல்லி

ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் போட்டியை நடத்த மத்திய அரசு பூர்வாங்க ஒப்புதல் தந்துள்ளது. எழுத்து பூர்வமான ஒப்புதல் எந்த நேரமும் கிடைக்கலாம் என இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, வழக்கமாக மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கண்ட்ரோல் போர்டு முடிவு செய்தது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 13-வது ஐபிஎல் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாக அமைப்பு முடிவு செய்தது. இதன்படி செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகக் குழு முடிவு செய்தது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை எழுந்ததால் சீன நிறுவனமான விவோ ஐபிஎல் போட்டிகளை ஸ்பான்சர் செய்வதை எந்தத் தரப்பும் விரும்பவில்லை. விவோ ஸ்பான்சர்ஷிப் பொறுப்பிலிருந்து விலகியது.
ஐபிஎல் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டபோதிலும் மத்திய அரசிடம் இருந்து ஐபிஎல் நிர்வாகத்துக்கு முறையான அனுமதி கிடைக்காததால், மேற்கொண்டு பணிகளைத் தொடங்காமல் இருந்தது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டித் தொடரை நடத்த மத்திய அரசு கொள்கை அளவில் வெள்ளியன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து அடுத்தக் கட்டப் பணிகளை போட்டியில் பங்கு கொள்ளும் அணிகளின் நிர்வாகங்கள் தொடங்கியுள்ளன.

அனைத்து அணி வீரர்கள், நிர்வாகிகள், அணி உறுப்பினர்கள் அனைவரும் ஆகஸ்டு 20-ம் தேதிக்குப் பின் இந்தியாவை விட்டுப் புறப்பட வேண்டும்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் 22-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகிறது.  இதையடுத்து வீரர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா என்று சோதிக்கவும் அவர்களை தனிமைப்படுத்தி வைக்கவும் 8 அணி நிர்வாகங்களும் பணிகளைத் தொடங்கியுள்ளன.

8 அணி நிர்வாகங்களும் வீரர்களைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளை நடத்த எற்பாடுகளைத் துவக்கி உள்ளன.

துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் கிரிக்கெட் அணிகள் தங்குவதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கத் துவங்கி விட்டன.