ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 24 மார்ச் 2020

* காசிக்குப் போனவர்கள் ராமேஸ்வரம் செல்வது கட்டாயமா? – சாவித்திரி, மானுார்.

காசியிலிருந்து கங்கை தீர்த்தம் கொண்டு வந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்யவேண்டும். இதுதான் இந்து மதத்தின் மிகப்பெரிய புனித யாத்திரை. இதுதான் ஒருங்கிணைந்த பாரதத்தின் புனித அடையாளமும் கூட.

* விழுந்து கும்பிடுவதில் ஆண் -– பெண்ணுக்கு வித்தியாசம் ஏன்? – குமரேசன், துாத்துக்குடி.

ஆண்கள் தலை முதல் கால் வரையிலான எட்டு அங்கங்களும் பூமியில் படுமாறும், பெண்கள் தலை,   முகம், கை, முழங்கால், பாதம் ஆகிய ஐந்து அங்கங்கள் பூமியில் படுமாறும் நமஸ்காரம் செய்ய வேண்டும். இதனை ‘அஷ்டாங்க பஞ்சாங்க நமஸ்காரம்’ என்பர். பெண்மையை எவ்விதத்தி லும்  துன்புறுத்தாத வழிபாடுகளை உடையது இந்து மதம்.

* இரவில் ஆதித்யஹிருதயம் சொல்லி வழிபடலாமா? – எஸ். அமிர்தவல்லி, திருநெல்வேலி.

எந்தெந்த வேளையில் எதை எதைச் செய்யவேண்டுமோ அவற்றை அப்படியே செய்வது சாலச்சிறந்தது. சூரியோதயத்தில் சொல்லும்போது அந்த மந்திர சப்தத்தின் ஒலி அதிர்வுகளும் இளம் சூரிய வெப்பமும் இணைந்து உடலுக்கு ஆரோக்கியத்தை ஏற்படுத்து வதை உணர்தல் அவசியம். அதுபோல் சுப்ரபாதமும் காலையில் மட்டும்தான் ஒலிக்க வேண்டும். சில கோயில்களில் மாலையும் இரவும்கூட ஒலிப்பெருக்கியில் ஒலிக்கச்செய்கிறார்கள். சில தவறுகளை திருத்திக் கொண்டால்தான் நமது அடுத்த தலைமுறையினருக்கு இந்து மதத்தின் உண்மைகளை கொண்டு செல்ல முடியும்.

* விரத நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாமா....? – எம். நிரஞ்சனா, பாபநாசம்.

விரதத்தில் சாப்பாடு கிடையாது. எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு சாப்பிடாமல் இருக்கக்கூடாது. எப்படி இரண்டும் ஒரே நாளில் இணையும்?