ஜார்கண்ட் முதல்வர் சந்திக்கும் சவால்கள்

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2020

ஜார்கண்ட் மாநிலத்தில் சென்ற வருடம் நவம்பர்–டிசம்பர் மாதங்களில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன் (44) பதவியேற்றார். ஆளும் தரப்பில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 1 தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பிரஜாதந்திரிக்) சார்பில் வெற்றி பெற்ற இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் காங்கிரஸ் பலம் 18 ஆக அதிகரித்துள்ளது. 81 இடங்கள் உள்ள சட்டசபையில் ஆளும் தரப்பின் பலம் 49 ஆக அதிகரித்துள்ளது.  

ஆட்சியை இழந்துள்ள பா.ஜ., 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பா.ஜ,வில் இருந்து பிரிந்து சென்று ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சா ((பிரஜாதந்திரிக்) என்ற தனிக்கட்சியை தொடங்கியவர் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டா. இவரது கட்சி மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றது. இவர் தனது கட்சியை பா.ஜ,,வில் இணைத்துள்ளார். ஆனால் இவரது கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.,க்களும் காங்கிரஸ் கட்சியில் ஐக்கிய

மாகியுள்ளனர். இவர் மட்டும் பா.ஜ.,வில் இணைந்துள்ளார். இதனால் பா.ஜ,வின் பலம் 26 ஆக அதிகரித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கனிமவளம் நிறைந்த மாநிலம். தனியார் தொழிற்சாலைகள், பொதுத்துறை தொழிற்சாலை கள் நிறைந்துள்ளன. ஆனால் மக்கள் வறுமையில் உழல்கின்றனர். மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் செல்வாக்கும் உள்ள மாநிலம். இதன் முதல்வர் ஹேமந்த் சோரன் பல சவால்களை எதிர் கொள்ள வேண்டியதுள்ளது.

கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி காலத்தில் சிது–கான்கு தலைமையில் பழங்குடி மக்கள் கிளர்ச்சி செய்தனர். அப்போது கிழக்கிந்திய கம்பெனி சோட்டாநாக்பூர் குத்தகை சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த சட்டத்தின் மூலம் பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலங்கள், ஜமீந்தார்கள், பணக்காரர்கள் வாங்குவது, கைப்பற்றுவது தடுக்கப்

பட்டது. இதற்கு முன் ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.,வின் ரகுபர்தாஸ் அரசு, சோட்டாநாக்பூர் குத்தகை சட்டத்தில் திருத்தம் செய்தது. இதன்படி பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கலாம் என்று சட்டதிருத்தம் செய்தது.

இந்த திருத்தம் காரணமாக தனியார் மூதலீடு குவியும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இதில் உள்ள சிக்கலை பற்றி அறிந்து. ஒரு தனியார் நிறுவனம் கூட மூதலீடு செய்ய முன் வரவில்லை. தற்போதைய முதலமைச்சர் ஹேமந்த் சோரன், இந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதே நேரத்தில் தொழில் தொடங்கும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான நிலங்களையும் வழங்க வேண்டும். இந்த சவாலை முதலமைச்சர் ஹேமந்த் சோரன் எதிர் கொள்ள வேண்டும்.

சோட்டாநாக்பூர் குத்தகை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட போது, இதற்கு பல பஞ்சாயத்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு காரணம் அரசு தங்கள் கிராமத்தில் பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தை வழங்க தனியாருக்கு ஏற்பாடு செய்ததே. அப்போது அரசு தரப்பில் பஞ்சாயத்தால் நிலம் வழங்க சம்மதம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை பெரும்பாலான பஞ்சாயத்துகள் கடுமையாக மறுத்தன. தற்போது ஹேமந்த் சோரன், இதில் உள்ள உண்மையை கண்டுபிடித்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அரசியல் சட்டத்தின் 5 வது பிரிவை முழுமையாக அமல்படுத்த வேண்டியதுள்ளது. இதன்படி மத்திய, மாநில அரசுகள் இயற்றும் சட்டங்களை, பழங்குடி மக்கள் வாழும் பகுதி களில் அமல்படுத்தலாமா என பழங்குடி மக்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். முந்தைய பா.ஜ., அரசு தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை எதிர்த்து, பழங்குடி மக்கள் வாழும் பல பகுதிகளில் ‘பதல்காடி இயக்கம்’ (Pathalgadi Movement) தொடங்கப்பட்டது. இதன்படி பழங்குடி மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சட்டத்தின் உரிமைகளை எழுதி பொது இடங்களில் வைத்தனர். தங்கள் பகுதிக்குள் அனுமதி இல்லாமல் யாரும் நுழைய கூடாது என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். இந்த போராட்டம் நடத்தியவர்களை, அப்போது ஆட்சியில் இருந்த ரகுபர்தாஸ் அரசு போலீஸ் படைகளை கொண்டு ஒடுக்கிய துடன், அவர்கள் மீது தேசத்துரோக வழக்குகளையும் பதிவு செய்தது. தற்போது பதல்காடி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மீது தொடரப்பட்டுள்ள தேச துரோக வழக்குகளை ஹேமந்த் சோரன் அரசு திரும்ப பெற வேண்டும். அத்துடன் அரசியல் சட்டத்தின் 5 வது பிரிவை முழுமையாக அமல்படுத்த வேண்டியதுள்ளது.

பீகார் மாநிலத்தில் இருந்து ஜார்கண்ட் பிரதேசத்தை தனி மாநிலமாக பிரிக்க கோரி நீண்டகாலம் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் குருஜி என்று அழைக்கப்படும் ஹேமந்த் சோரன் தகப்பனாரும், முன்னாள் முதல்வருமான சிபு சோரன் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை, நாட்டின் விடுதலை போரில் ஈடுபட்டோருக்கு இணையாக கருத வேண்டும் என, இதில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதற்காக ரகுபர் தாஸ் தலைமையிலான முந்தைய பா.ஜ., அரசு, தனிமாநில போராட்டத்தில் பங்கேற்றவர்களை அடையாளம் காண்பதற்கு கமிஷனை அமைத்த்து. இவர்களுக்கு ஓய்வூதியம், இதர சலுகைகள் வழங்கப்படும். ஆனால் பா.ஜ.,அரசின் ஐந்து வருட ஆட்சியில் இந்த கமிஷன் தனி மாநிலம் கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட ஒருவரை கூட அடையாளம் காணவில்லை. கமிஷன் அமைத்தது கண்துடைப்பு நடவடிக்கையாக இருந்ததாக கூறுகின்றனர்.

மற்ற மாநிலங்களை போலவே, ஜார்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையமும், அரசு அதிகாரிகள், ஊழியர்களை தேர்வு செய்கிறது. காலியாக உள்ள அரசு பணிகளின் எண்ணிக்கை அறிவிக்கிறது. இதற்கு முன் ஆண்ட ரகுபர் தாஸ் அரசு, ஒரு முறை மட்டுமே அரசு ஊழியர்களை தேர்வு செய்யும் தேர்வை நடத்தியுள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையில் காலியிடங்கள் உள்ளன.

அகில ஜார்கண்ட் மாணவர் சங்க கட்சியின் மாவட்ட தலைவரும், மத்திய அரசின் 20 அம்ச திட்டத்தை ஜமத்தாரா மாவட்டத்தில் அமல்படுத்தும் கண்காணிப்பு குழுவில் உறுப்பினராக இருந்தவர் ராஜேஸ் மகாடா. இந்த குழுவின் கூட்டத்தில் ஒருங்கிணைந்த பழங்குடியினர் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து, வர்த்தக ரீதியாக கோழிப்பண்ணை அமைக்க பழங்குடி மக்களுக்கு பயிற்சி அளிக்க ரூ. 1 கோடியே 50 லட்சத்து 37 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, ஒரு கோழி கூட வழங்கப்படவில்லை. பழங்குடி மக்களின் மேம்பாட்டிற்காக மத்திய அரசும், மாநில அரசும் கணிசமான நிதியை ஒதுக்குகின்றன. ஆனால் பழங்குடி மக்களுக்கு சொற்ப நிதியே போய் சேருகிறது என்ற குற்றம் சாட்டினார். இதற்கு காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து, பழங்குடி மக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, அவர்களுக்கு ஹேமந்த் சோரன் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதுள்ளது.

ராஞ்சி பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருப்பவர் வினய் பாரத். இவர் பல்கலைக்கழகங்கள், அரசு கல்லூரிகளில் 1,500 இடங்கள் காலியாக இருப்ப

தாக கூறுகின்றார். இதனால் நன்கு படித்த பல ஜார்கண்ட் மாணவர்களுக்கு வேலை கிடைக்காமல் உள்ளது என்கின்றார். கடைசி தடவையாக 2008ல் 700 பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். இடைப்பட்ட காலத்தில் புதிது புதிதாக பல கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இங்கு போதிய பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் இல்லாத காரணத்தால் கல்வியின் தரம் மோசமாக உள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் மருத்துவ துறையும் சீர்குலைந்துள்ளது. ‘ஆயுஸ்மான் பாரத்’ திட்டத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், தனியார் மருத்துவமனை களிலும் சிகிச்சை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இருந்தும் பயன்படாமல் உள்ளது. நவீன கருவிகள் இருந்தும் இவற்றை இயக்குவதற்கு தேவையான ஊழியர்கள் இல்லை. இதனால் மருத்துவர்கள் வேறு வழியில்லாமல்  சோதனை செய்து கொள்ள நோயாளிகளை தனியார் மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஏதாவது ஒரு காரணத்திற்காக ஒருவரை கும்பலாக சேர்ந்து அடித்துக் கொல்லும் செய்திகள் அடிக்கடி வெளிவருகின்றன. தன்பாத், பொகாரோ, ஜாம்ஷெட்பூர், ராஞ்சி உட்பட பல நகரங்கள் மூன்றாம் நிலை நகரமாகவே உள்ளன. எந்த நகரிலும் காவல்துறைக்கு  ஆணையாளர் அந்தஸ்தில் இல்லை. போலீஸ் துறையிலும் அதிக காலி இடங்கள் உள்ளன. பாலிவுட் திரைப்படங்களிலும், இணையத்தில் வெளியாகும் படங்களிலும், இந்த மாநிலத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் காட்டப்படுகின்றன. இந்த நிலையை மாற்ற உள்துறையில் முதல்வர் ஹேமந்த் சோரன் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஜார்கண்ட் மாநிலத்தில் நீர் வளம் என்பது நாளக்கு நாள் கேள்விக்குரியாக மாறிவருகிறது. பல்வேறு அமைப்புகள் நிலத்தடி நீர் மட்டம் அதால பதாளத்திற்கு சென்று கொண் டிருப்பதன் அபாயத்தை எடுத்துக் கூறியுள்ளன. ஆனால் இது வரை ஆண்ட அரசுகள், இதற்கு நிரந்தர தீர்வுகாண எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இந்த மாநிலத்தில் தேசிய சராசரி அளவை விட அதிக அளவு மழை பெய்கிறது. ஆனால் மலைபாங்கான, பாறைகள் நிரம்பி இருப்பதால் மழை நீரை பூமியில் சேமிக்க முடியாமல் உள்ளது. இதற்கு முன் ஆட்சியில் இருந்த ரகுபர் தாஸ் அரசு, மூன்றே மாதங்களில் மழை நீரை சேமிக்க ஒரு லட்சம் குளங்களை வெட்டியது. இதில் பெரும்பாலான குளங்கள் பராமரிக்கப்படாமல் சிதைந்து போய் உள்ளன. இவற்றை சீரமைக்க வேண்டும். இரண்டு வருடங்களுக்கு முன்னால் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான ஜெய்ராம் ரமேஷ் ராஞ்சிக்கு வந்து இருந்தார். அவரிடம் நிருபர்கள், இந்த மாநிலத்திற்கு நீங்கள் முதலமைச்சராக இருந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை கேட்டனர். இதற்கு ஜெய்ராம் ரமேஷ் பதிலளிக்கையில், வருடம் முழுவதும் எல்லா விவசாயிகளுக்கும் தண்ணீர் கிடைக்க செய்வேன் என்று பதிலளித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.

முதலமைச்சர் ஹேமந்த் சோரன் சந்திக்க வேண்டிய சவால்களும், நிறைவேற்ற வேண்டிய திட்டங்களும் அடுக்கடுக்காக உள்ளன. இவற்றை எப்படி எதிர் கொண்டு, நிறைவேற்ற போகிறார்.

நன்றி: தி க்யூன்ட் இணையதளத்தில் அந்தோணி காட்சதுரியன்.