அரசியல் மேடை: சட்டசபையிலும் கொரோனா பீதி!

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2020

கொரோனா வைரஸ் நோய் பற்றிய பயமும், பீதியும் உலக நாடுகளையே அச்சுறுத்திக் கொண்டுள்ளன. உலகப் போருக்கே அஞ்சாத பல நாடுகள்  இந்த ‘கொரோனா’ தாக்குதலால் நிலைகுலைந்து போயுள்ளன. சீன நாட்டிலிருந்து பரவிய இந்த வைரஸ் நோய்த்தொற்று 165 நாடுகளில் சுமார் 8300 பேருக்கு பரவி ஒரு அபாயகர நிலையை உருவாக்கியுள்ளது.

ஆசிய கண்டத்திலுள்ள நாடுகளை விட ஐரோப்பாக் கண்டத்திள்ள நாடுகள்தான் அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளன.  சீன நாட்டில் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை 81 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. சுமார் மூவாயிரத்து 237 பேர் மரணம் அடைந்துள்ளனர். சுமார் 7 ஆயிரம் பேர் தக்க நேரத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில் இதன் பாதிப்பு மிக குறைவாக இருந்தபோதிலும் மத்திய – மாநில அரசுகள் விழிப்புணர்வோடு முன் னெச்சரிக்கையை எடுத்து வருகின்றன.

தமிழ்நாட்டில், குறிப்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை மிகத் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டு முறை, மூத்த அமைச்சர்கள், பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளார்.

இது தவிர, தலைமை செயலாளர் தலைமையில் பல்வேறு துறை அதிகாரிகள் கொண்டு ‘சிறப்புக் குழு’வை அமைத்து அடிக்கடி இக்குழுவினர் கலந்தாலோசித்து ‘கொரோனா வைரஸ்’ தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக கடந்த மூன்று தினங் களாக தமிழக சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானமாகவும், மற்ற விவாதங்களின் போதும் இந்த பிரச்னை எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் விரிவான விளக்கம் அளித்தார். சென்னை மாநகரம் உட்பட மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கான என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை தெளிவுபடுத்தினார். சென்னை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

விமானம் மூலம் சென்னை வருகை தந்த சுமால் 1 லட்சத்து 80 ஆயிரம் பயணிகளை பரிசோதித்ததில், எவருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்றும், காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி கள் இருப்பவர்கள் சுமார் 2 ஆயிரத்து 200 பேரை தனிமைப்படுத்தி அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவ தாகவும் அவர் கூறினார்.

மஸ்கட்டிலிருந்து சென்னை வந்த காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த இன்ஜினியர் ஒருவருக்குத்தான் ‘கொரோனா’ அறிகுறி தென்பட்டதாகவும், அவரும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பி விட்டதாகவும் தெரிவித்தார்.

கோழி, முட்டை சாப்பிடுவதால் இந்த நோய் பாதிப்பு வராது என்றும் அது குறித்து யாரும் பயப்பட தேவையில்லை என்றும் தெரிவித்த அமைச்சர், முதலமைச்சர் ஆலோசனை கூட்டங்கள் நடத்தி, உடடினயாக சுமார் 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்திட உத்தரவிட்டிருப்பதாகவும் கூறினார்.

மக்கள் அதிக அளவில் கூடும் சினிமா தியேட்டர்கள்,பெரிய வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள் மூடுவதற்கும் அரசு உத்தரவிட்டு உள்ளது என்றும் அமைச்சர் தெரவித்தார்.

இது தொடர்பாக சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சித் துணை தலைவர் துரைமுருகன், காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவர் ராமசாமி ஆகியோர் ‘கொரோனா’ பயம் எல்லோரிடத்தும் பரவியுள்ள நிலையில், மக்கள் கூடும் இடங்களையெல்லாம் மூடுவதற்கு அரசு உத்தரவிட்டள்ள நிலையில் சட்டசபை கூட்டம் நடத்துவது சரியா? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எழுபது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ‘கொரோனா’ வைரஸ் தாக்குதல் இருக்கும் என்று கூறப்படுவதால், துரைமுருகன் பயப்படுகிறார். அவர் அச்சப்படத் தேவையில்லை. இங்கு யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று கூறினார்.

மேலும், சட்டசபை வளாகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, உறுப்பினர்கள் சோதிக்கப்பட்டுத்தான் அவைக்கு வருகிறார்கள். பார்வையாளர்களுக்கும் தடை விதிக்கப்பட்டள்ளது. சட்டசபை நடவடிக்கைகளை ஒத்திவைக்கத் தேவையில்லை என்று கூறினார்.

இந்த விவாதங்கள் நடைபெற்ற மறுநாளில் இருந்து சட்டசபையின் நுழைவாயிலில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், காயச்சலை கண்டறியும் கருவி, கிருமி நாசினி, மருந்து, மாத்திரைகள், முகக் கவசம் உள்ளிட்டவையோடு இருந்து தலைமை செயலகத்திற்குள் நுழையும் சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்களை சோதனையிட்டு அனுப்பினர்.

சட்டசபை லாபி பகுதியில், உறுப்

பினர்கள் கைகளில் தேய்த்துச் கொள்வ தற்கான ‘‘சானிடைசர்கள்’’ (திரவ கிருமி நாசினி) வைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறையும் சபைக்குள் செல்லும் உறுப்பினர்கள் இதை பயன் படுத்திக்கொண்டனர்.

இது தொடர்பாக சட்ட சபையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை வரவேற்றுப் பாராட்டினார். சென்னை மாநகர் பகுதி மட்டுமல்லாது மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும்  இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பரிசோதனை  மையங்கள் மற்றும் சிகிச்சை பிரிவுகளை நகர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் ஏற்படுத்தாமல், நகர் பகுதிக்கே வெளியே அமைத்திட வேண்டும். சென்னை மட்டுமல்லாமல், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரிசோதனை மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலி யுறுத்தினார். இதுபோன்ற அத்தனை பணி களையும் மாநில அரசு மேற்கொண்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

உலக நாடுகள் பலவற்றிலும் பெரும் பயத்தையும், பீதியையும் உருவாக்கி யுள்ள ‘கொரோனா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் உள்ள படியே தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவே பலரும் கருதுகின்றனர்.

ஆனாலும் பொதுமக்களிடம் அதிக அளவு பயம் வரக் காரணம் ‘கொரோனா வைரஸ்’ பற்றி தவறாக பரப்பப்படும் வதந்திகளும், இணையதளத் தகவல்களும்தான். இந்த வைரஸ் காற்றின் மூலம் பரவாது, வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர் இருமினாலோ, தும்மினாலோ அருகில் இருப்பவருக்கு தொற்றும், அவர் மற்ற இடங்களுக்கு சென்று தொடும் இடங்களை மற்றவர்கள் தொட்டால் அவர்களுக்கும் பரவும். அதனால்தான் அடிக்கடி கைகைளை கழுவ வேண்டும், பொதுமக்கள் அதிக அளவு கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றெல்லாம் அரசு வேண்டுகோள் விடுக்கிறது. தவிரவும் இந்த வைரஸ் 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் 70 வயது கடந்த முதியவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இன்றி பாதிப்புக்கு ஆளானவர்கள் ஆகியோரைத்தான் எளிதில் தாக்கும். ஆரோக்கியமானவர்கள் பயப்படத் தேவையில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கரும், மற்றுமுள்ள மருத்துவ நிபுணர்களும் சொல்கிறார்கள். எனவே, ‘கொரோனா’ பீதி இன்றி தகுந்த முன் எச்சரிக்கையோடு இருப்போம். இந்த பயத்தை ‘கை கழுவுவோம்’