துரை கருணா எழுதும் ‘கொஞ்சம் திரும்பிப் பார்ப்போம்..!’ – 73

பதிவு செய்த நாள் : 21 மார்ச் 2020

சென்னைப் பல்கலைக்கழகம் தோற்றமும் வளர்ச்சியும்

160 ஆண்டுகள் கடந்த சென்னை பல்கலைக் கழகத்தின் தோற்றம் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து இந்த வாரம் பார்ப்போம்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியா வில் முதன்முதலாகத் தோன்றிய மூன்று பல்கலைக் கழகங்களில் சென்னை பல்கலை கழகமும் ஒன்று. 1857–ம் ஆண்டு இந்திய ஆட்சியினர் கொண்டுவந்த சட்டத்தின்படி இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதன் நோக்கம் பிரபலமான லண்டன் பல்கலக்கழகம் போல் உயர் கல்விக் கான தேர்வுகளை நடத்தி, தேர்ச்சி பெற்ற வர்களுக்கு பட்டங்கள் வழங்குவதாகும். அன்றைய சென்னை மாகாணத்துக்குட்பட்ட கல்லூரிகள் அனைத்தையும் இணைத்துக் கொண்டு, இப்பல்கலைக் கழகம் தேர்வுகளை நடத்தி வந்தது.

சென்னை பல்கலைக்கழகம் 1857ம் ஆண்டு முதல்  1873–ம் அண்டு வரை இராசதானிக் கல்லூரியின் ஒரு பகுதியில் இருந்து வந்தது. 1873–ம் ஆண்டு செனட் கட்டடம் கட்டி முடிந்ததும் அந்த புதிய கட்டடத்துக்கு பல்கலைக் கழகம் மாற்றப் பட்டது. பின்னர் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சித் துறைகளும், தமிழ் லெக்சிகன் அலுவலகமும் இப்போதுள்ள பல்கலைக் கழகக் கட்டடம் 1936–ம் அண்டு கட்டி முடியும் வரை வாடகை கட்டடத்தில் தான் இயங்கி வந்தன.பின்னர் தொடர்ந்து செனட் கட்டடம் தவிர, பல்கலைக் கழக அலு வலகம், ஆராய்ச்சித்துறைக் கட்டடம், பல்கலைக்கழக நூல் நிலையம் முதலியவை ஏற்பட்டுள்ளன. விலங்கியல், தாவரவியல் ஆராய்ச்சிக் கட்டடங்களும் செனட் கட்டடத்தின் அருகில் கட்டப்பட்டன.

பல்கலை கழகத்தின் தேர்வு மண்டபம் செனட் கட்டடத்திற்கு தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. சென்னை பல்கலைக் கழகம் முதன் முதலாக 1858–ம் அண்டு பி.ஏ.தேர்வும். எம்.டி. தேர்வும் நடத்தியது. பின்னர் 1860–ல் பி.எல். தேர்வையும், 1864–ல் பி.ஈ. தேர்வையும் நடத்தியது.

20–ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 1904–ம் ஆண்டு இந்திய அரசு இயற்றிய சட்டத்தின் மூலம் பல்கலைக் கழகங்களின் பணிகள் விரிவுபடுத்தப்பட்டது. தேர்வு நடத்துவதுடன் கல்வி கற்கவும், ஆராய்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இப்புதிய பணிகளை செய்வதற்காக 1911–ம் ஆண்டு அன்றைய இந்திய அரசாங்கம் பல்கலைக் கழகத்துக்கு நான்கு லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியது.

1914–ம் ஆண்டு இந்திய வரலாறு, இந்திய பொருளாதாரம், ஒப்பு மொழியியல் ஆகிய மூன்று புதிய துறைகள் ஏற்படுத்தப்பட்டன. 1930–ம் ஆண்டில் ஒப்பு மொழியியல் துறைக்கு பதிலாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலை யாளம், சமஸ்கிருதம், அரபு, பாரசீகம், உருது மொழித்துறைகள் ஏற்படுத்தப்பட்டன.

சென்னை பல்கலைக்கழகம் தமிழ் லெக்சிகன் என்னும் அகராதியை தொகுக்கும் பணியை 1913–ம் ஆண்டு தொடங்கி 1936–ம் ஆண்டு தமது பணியை முடித்து ஏழு தொகுதிகளாக வெளியிட்டது.

1928–ம் ஆண்டு முதல் நாட்டி லுள்ள மொழிகள் குறித்து பல்வேறு ஆய்வு களை மேற்கொண்டு அதன் வளர்ச்சிக்காகப் பல காரியங்களை சென்னைப் பல்கலைக் கழகம் செய்துள்ளது. இம்மொழிகளில் உயர்ந்த பட்டங்கள் பெறுவதற்கான தேர்வுகளை வகுத்தது. 1933–ம் அண்டு முதல் பொருளாதாரம் தொடங்கி மோட்டார் பொறியியல் வரை பல்வேறு துறை ஆங்கில நூல்களின் சிறந்த மொழி பெயர்ப்புகளுக்கு பரிசுகள் வழங்கி, கலை நூல்கள் பல இந்திய மொழிகளில் வருவதற்கு பல்கலைக்கழகம் துணை செய்துள்ளது.

1927–ம் ஆண்டு முதல் 1947 வரையுள்ள 20 ஆண்டுகள் காலத்தில் விலங்கியல், தாவரவியல், உயிர்ப்பொருள் ரசாயணம், கணிதம் ஆகியவற்றுடன் புள்ளியில், இந்திய இசை, பூகோளம், மானுடவியல், அரசியல் பொது நிர்வாகம், தொழில்நுட்பவியல், உளவியல் ஆகிய புதிய துறைகள் ஏற்படுத்தப்பட்டன.

இவை தவிர பிரெஞ்சு, ஜெர்மன் மொழி

களிலும், பத்திரிகை இயலிலும் (ஜர்னலிசம்) பட்டயப் படிப்புகளையும் தொடங்கி நடத்தி வருகிறது. 1951ம் ஆண்டில் பவுதிகம், புவியியல், புவி பவுதிகம், இந்தி

துறை, சட்ட ஆராய்ச்சி துறை உள்ளிட்ட புதிய துறைகள் இப்பல்கலைக் கழகத்தில் தோற்று விக்கப்பட்டன. 1953–ம் ஆண்டு பகுமுறை ரசாயனத்துறை யும், 1955–ல் வணிக நிர்வாகத்துறையும் உருவாக்கப் பட்டன. கலைத்துறையில் மூன்றும், விஞ்ஞானத்துறையில் மூன்றும் ஆராய்ச்சி பட்டங்களையும் இப்பல்கலைக் கழகம் உருவாக்கியது. ஆராய்ச்சி செய்யும் மாணவ, மாணவியர்க்கு உதவித் தொகையும் இங்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆராய்ச்சி துறையிலுள்ள ஆசிரியர்கள், மாணவர்கள் அவர்களுடைய ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவதற்காக 1928–ம் ஆண்டு முதல் ‘சென்னைப் பல்கலைக்கழக இதழ்’ ஒன்றையும், 1936–ம் ஆண்டு முதல் கீழ் நாட்டு ஆராய்ச்சித்துறை இதழையும் நடத்தி வந்தது. 1920–ம் ஆண்டு முதல் பல்கலைக் கழகப் பயிற்சிப்பனியை நிறுவியது. பின்னர் 1942–ல் பல்கலைக்கழக அலுவலர் பயிற்சிப் பனியையும் நிறுவி நடத்தி வந்தது.

சென்னை பல்கலைக் கழகத்தில் மிகப்பெரிய நூலகம் உள்ளது. ஆங்கில அறிஞர் வில்லியம் கிரிபித், பல்கலைக்கழகத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என தமது உயிலில் எழுதி வைத்ததன்படி, அந்த ரூபாயை கொண்டு 1903–ம் ஆண்டில் இந்நூலகம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை எழும்பூர் அரசு பொருட்காட்சி மண்டபத்தில் இருந்தது. பின்னர் சென்னை பல்கலைக்கழக செனட் மண்டபத்துக்கு மாற்றப்பட்டது. பின்னர் 1936–ம் ஆண்டு தனியாக நூலகப் பகுதி உருவாக்கப்பட்டது. நான்கு மாடிகளை கொண்ட இந்த நூலகத்தில் மிகப்பெரிய படிப்பறை, பத்திரிகை அறை, நூலடுக்கு அறை, நூல் பட்டியலறை, அலுவலக அறைகள் உள்ளன. நூலடுக்கு பகுதியில் உள்ள அலமாரிகளை வரிசையாக வைத்தால் அது சுமார் இரண்டு மைல் நீளம் இருக்கும். 50களில் இந்த நூலகத்தில் இடம்பெற்ற நூல்கள் சுமார் இரண்டு லட்சம் இருக்கும். இவை தவிர, சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தேசப்படங்களும், சுமார் ஆயிரத்துக்கும் மேற்

பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளும், பல்வேறு அறிஞர்கள் பெருமக்கள் அளித்த அரிய நூல்கள் பலவும் இந்நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

சென்னை பல்கலைக்கழகம் சமூக சேவை என்னும் துறையும் ஏற்படுத்தி டிப்ளமோ அளித்து வருகிறது. 1957–ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு விழா மிகவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இன்றளவும் பாரம்பரிய பெருமையும், சிறப்பும் கொண்ட இப்பல்கலைக் கழகத்தில் கால மாற்றத்திற்கு ஏற்ப, நவீன விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப பல்வேறு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப் படுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது.