விருதுநகர் மாவட்டம், சத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1980ல், 5ம் வகுப்பு படித்த போது நடந்த நிகழ்வு இது...
தினமும், பள்ளிக்கு வெளியே விற்கும், தின்பண்டங்களை வாங்கி, வகுப்பில் தோழியருடன் சாப்பிடுவேன்.
ஒரு நாள், வகுப்பு ஆசிரியை வசந்தா பாடம் நடத்திக் கொண்டிருந்தார்; அதை கவனிக்காமல் நெல்லிக்காயை தின்றபடி இருந்தோம். அதை கண்ட ஆசிரியை, 'என்ன செய்றீங்க...' என்றபடி, அன்று நடத்திய பாடத்திலிருந்து கேள்விகள் கேட்டார்.
எதுவும் தெரியாமல் விழித்தேன். உடனே, என் பையை வாங்கி கவிழ்த்தார்; தின்பண்டங்களைக் கண்டதும், 'தெருவில் விற்கும் தின்பண்டங்களில், நிறைய நுண்கிருமிகள் இருக்கும்; சாப்பிட்டால், காய்ச்சல், வயிற்று போக்கு போன்ற அவதிகள் ஏற்படும்; பெற்றோர் தரும் காசுகளை சேர்த்து வைத்தால், கஷ்டங்களில் உதவும்...' என்று அறிவுரைத்தார்.
அதை, திருமணத்துக்கு பின்னும் கடைபிடித்து வருகிறேன். சிறுதொகையை வங்கியில் தவறாமல் சேமிக்கிறேன். சிக்கலான நேரங்களில் பெரும் உதவியாக இருக்கிறது.
–- எம்.சித்ரா, மதுரை.