ஜமனாமத்துார் காட்டில், வேட்டை துப்பாக்கி, மரம் வெட்டும் வாளுடன், சிறிய லாரியில் நுழைந்தது கும்பல்.
மரத்தில் தாவி விளையாடிய குரங்கு, காட்டை அழிக்க வந்து விட்டதை உணர்ந்து, 'க்ரீச்... க்ரீச்...' என கத்தியது.
இதை கவனித்த காகம், 'ஏன்... இப்படி பரபரப்பா இருக்க...' என்றது.
குரங்கு விஷயத்தை கூறியதும், 'வா... நண்பர்களை திரட்டி, கும்பலைத் துரத்தலாம்...' என்றது காகம்.
அதன்படி, பறவைகள் நாலா திசையிலும் பறந்து, விலங்குகளை அழைத்து வந்தன. குகையில், சிங்கராஜா தலைமையில் அவசர ஆலோசனை நடந்தது.
'எல்லாரும் ஒரு சேர தாக்கினா, பயந்து ஓடிடுவாங்க...' என்றது சிங்கம்.
குரங்கு வழிகாட்ட, விலங்குகள் எல்லாம் அணி வகுத்தன. இதைக் கண்டதும் துப்பாக்கியால் சுட துவங்கியது கும்பல்; விலங்குகள் பயந்து, சிதறி ஓட துவங்கின.
இச்சமயத்தில், எதிர்பாராத சம்பவம் நடந்தது.
மரத்தில் கூடமைத்திருந்த தேனீ கூட்டம், கோபத்துடன், 'காட்டையா அழிக்கப் பார்க்குறீங்க... விடுவோமா...' என்று கூறி, கொட்டி பதம் பார்த்தன.
மரம் வெட்ட வந்தவர்கள், 'ஐயோ... அம்மா...' அன்று அலறி துடித்து ஓடினர். இதை கவனித்து, தகவலை பரப்பியது குரங்கு.
விலங்குகள் கூடின. மரம் வெட்டும் கும்பலில் இருந்த, நான்கு பேரையும் சிறைபிடித்து, இருட்டுக் குகைக்கு கொண்டு சென்றன.
சபையில் வீற்றிருந்த சிங்கம், 'எங்கள மாதிரி, விலங்குகள் எப்பவாவது வழி தவறி, நாட்டுக்குள் வந்தா, சுட்டுக் கொன்னுடுறீங்க... இப்போ, அமைதியான காட்டை அழிக்கப் பாக்குறீங்க... உங்க வீட்டை அழிச்சா சும்மாயிருப்பீங்களா...' என்றது.
மரம் வெட்ட வந்தவர்கள், மன்னிப்பு கேட்டு கெஞ்சினர். கம்பீரத்துடன் நிமிர்ந்த சிங்கம், ' காட்டுக்கு வழி தவறி வந்தவங்கள நாங்க ஒண்ணும் செய்வதில்ல. ஆனா, காட்டை அழிக்க வந்தவங்களை மன்னிக்க முடியாது...' என்றது.
அவர்களுக்கு தண்டனை கொடுப்பது பற்றி விலங்குகள் ஆலோசித்தன. அப்போது குரங்கு, 'குகைக்குப் பின்னால் நிறைய வெற்றிடம் இருக்கு; அங்கே மரக்கன்றுகளை நட்டு, காட்டை உருவாக்கும் வேலைக்கு இவங்கள பயன்படுத்தலாம். மரங்களை வெட்ட வந்ததுக்கு சரியான தண்டனையா இருக்கும்...' என்றது.
விலங்குகள் ஆமோதித்தன. மனிதர்கள் குழிகளை தோண்டினர். பறவைகள் எடுத்து வந்த விதைகளை போட்டு மூடினர். நீர் நிலையிலிருந்து, தண்ணீரை எடுத்து ஊற்றினர். இப்படியாக, பல ஆயிரம் விதைகளை விதைத்தனர்; மரக்கன்றுகளை நட்டனர். அங்கு அடர்ந்த காடு உருவானது.
குழந்தைகளே... உயிரினங்களையும், இயற்கை செல்வத்தையும் பாதுகாத்தால் தான் எதிர்காலத்தில் நலமாக வாழ முடியும்; இயற்கையை பாதுகாப்போம்.
- – ஆர்.வி.பதி
***