ஐஎஸ்எல் கால்பந்து போட்டி டில்லியிடம் சென்னை தோல்வி

பதிவு செய்த நாள் : 07 அக்டோபர் 2016 07:36


சென்னை:

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடந்த லீக் போட்டியில் சென்னை அணியை 3–1 என்ற கணக்கில் டில்லி அணி வீழ்த்தியது. ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டிகள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 6வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்சி அணியும், டில்லி டைனமோஸ் அணியும் மோதின.  

சென்னை ஜவகர்ஹால் நேரு விளையாட்டரங்கில் நேற்று இரவு 7 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் டில்லி அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை மார்சிலெனோ கோலாக்கினார். 32வது நிமிடத்தில் சென்னை அணி வீரர் ஒமாக்பெமி பதில் கோலை அடித்தார். அடுத்த 2 நிமிடத்திலேயே மீண்டும் ஒரு கோலை அடித்தார் மார்சிலெனோ. முதல் பாதி ஆட்டத்தில் டில்லி அணி 2–1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2வது பாதி ஆட்டத்தின் 84வது நிமிட த்தில் டில்லி அணியின் பட்ஜி கோல் அடித்தார்.  இதையடுத்து 3–1 என்ற கோல்கணக்கில் டில்லி டைனமோஸ் அணி வெற்றி பெற்றது.