இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி ரூ 2000மாக உயர்வு – முதலமைச்சர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 12 ஜனவரி 2022 16:13

சென்னை

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு வழங்கியதுபோல் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.1,000/- ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடை இவ்வாண்டில் ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (12-1-2022) அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களின் வளர்ச்சிக்கும், திருக்கோயில் சொத்துக்களைப் பாதுகாக்கவும், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கொரோனா நோய்த் தொற்றுக் காலத்தில், மாத ஊதியம் பெறாத பூசாரிகள் மற்றும் இதர அர்ச்சகர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.4,000/- மற்றும் 15 மளிகைப்பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்கப்பட்டன.

துறை நிலையிலான ஓய்வுப் பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக் கலைஞர்கள் முதலானவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வுதியம் ரூ.1,000/-த்தை ரூ.3,000/- ஆக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டது.

கிராமக் கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ரூ.3,000/-த்தை ரூ.4,000/- ஆக உயர்த்தி வழங்க ஆணையிடப்பட்டது.

திருக்கோயிலில் பக்தர்கள் மொட்டை போடுவதற்கான கட்டணம் விலக்களித்து, அப்பணியை மேற்கொள்ளும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000/- ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திருக்கோயில் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு செட் புத்தாடைகள் வழங்கப்பட்டு வருகிறது.

     அவ்வாறே, தற்போது அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூபாய் 1 இலட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் வரப்பெறும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு 01.01.2022 முதல் அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து, 14 விழுக்காடு உயர்வு செய்து, 31 விழுக்காடாக நிர்ணயம் செய்து வழங்க உத்தரவிடப்படுகிறது. இதன்படி, அர்ச்சகர்கள் மற்றும் சீட்டு விற்பனையாளர்களுக்கு ரூ.2,500/-, காவல் பணியாளர்களுக்கு ரூ.2,200/-, துப்புரவுப் பணியாளர்களுக்கு ரூ.1,400/- மாதச் சம்பளம் உயரும். இதன் மூலம், சுமார் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். இதனால், ஆண்டொன்றுக்கு ரூபாய் 25 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

பொங்கல் கருணைக்கொடை உயர்வு

     அரசு ஊழியர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படுவதுபோல், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் முழுநேரம், பகுதிநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.1,000/- ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடை இவ்வாண்டில் ரூ.2,000/- ஆக உயர்த்தி வழங்க உத்தரவிடப்படுகிறது. இதனால், இவ்வாண்டு ரூ. 1.5 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.