2021ஆம் ஆண்டில் 55.7 பில்லியன் டாலருக்கு தங்கம் இந்தியாவில் இறக்குமதி

பதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2022 17:22

மும்பை, ஜனவரி 11,

2021 ஆம் ஆண்டில் இந்தியா 55.7 பில்லியன் டாலரை தங்க இறக்குமதிக்கு செலவிட்டது சாதனை அளவாகும். இதற்கு முன்னர் 2011 ஆம் ஆண்டில் 53.9 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்பட்டது இதுவரை சாதனை அளவாக இருந்தது இந்த சாதனை 2021ஆம் ஆண்டு முறியடிக்கப்பட்டது.

2020ஆம் ஆண்டு இந்தியா 430 டன் தங்கத்தை இறக்குமதி செய்தது.

2021ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட மொத்த தங்கத்தின் எடை 1050 டன்கள் ஆகும்.

உலகத்தில் தங்கத்தைப் பயன்படுத்துவதில் இரண்டாவது இடத்தில் இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது.

2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் பல திருமணங்கள் ஒத்திவைக்கப்பட்டன. அதனால் தங்கத்தின் விற்பனை அளவு குறைந்தது. இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட திருமணங்கள் எல்லாம் 2021ஆம் ஆண்டில் நடந்தன. அதனால் 2021ம் ஆண்டில் தங்கத்தின் தேவை 1050 டன்களாக உயர்ந்தது என்று கல்கத்தா நகர தங்க மொத்த வியாபாரி ஹர்ஷத்  அஷ்மேரா கூறினார்.

2022ஆம் ஆண்டில் தங்க இறக்குமதி சென்ற ஆண்டு அளவில் தொடரும் என்று கூற முடியாது. ஏனென்றால் இந்தியாவில் இப்பொழுது ஒமைக்ரான் வைரஸ் தொற்று பேரலையாக அதிகரித்து வருகிறது.