சீனாவில் இறக்குமதியாகும் 5 பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு தீர்வை விதிப்பு

பதிவு செய்த நாள் : 27 டிசம்பர் 2021 12:42

புதுடெல்லி. டிசம்பர் 27,

சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் ஐந்து வகையான பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு தீர்வையினை இந்தியா விதித்துள்ளது.

பொருள் குவிப்பு தடுப்பு தீர்வை விதிக்கப்பட்ட ஐந்து பொருள்கள் விவரம் வருமாறு:

1. அலுமினிய பட்டை பொருள்கள்

2. சோடியம் ஹைட்ரோ சல்பைட்,

3. சிலிக்கோன் சீலன்ட்,

4. ஹைட்ரோ புளோரோ கார்பன்,

5. ஹைட்ரோ புளோரோ கார்பன் கேஸ் கலவை.

அலுமினிய பட்டை பொருள்கள் கட்டுமானம் மற்றும் மின்சார சாதனங்களில் பயன்படுத்தப்படுகிறது.

சோடியம் ஹைட்ரோ சல்பைட் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தொழில் பயன்படுத்தப்படுகின்றது.

சிலிக்கோன் சீலென்ட் சூரிய மின்சார தகடுகள் மற்றும் அனல் மின்சார பயன்பாடுகளில் கையாளப்படுகிறது.

ஹைட்ரோ புளோரோ கார்பன் மற்றும்

ஹைட்ரோ புளோரோ கார்பன் கேஸ் கலவை ரெஃப்ரிஜிரேட்டர் தொழிலில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஐந்து வகையான பொருள்கள் மீது பொருள் குவிப்பு தடுப்பு தீர்வை விதிக்க வகை செய்யும் ஐந்து அறிவிப்புகள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன.

மத்திய வர்த்தக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புலனாய்வு அமைப்பு திரட்டிய தகவல்களின் அடிப்படையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 5 வகையான பொருள்கள் இந்திய தொழில் துறையை கடுமையாகப் பாதிப்பதாக கண்டறியப்பட்டது அதைத் தொடர்ந்து ஐந்தாண்டு காலத்துக்கு பொருள் குவிப்பு தடுப்பு விதிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ட்ரெய்லர்களில் பயன்படுத்தப்படும் ஆக்ஸில்கள் மீதும் பொருள் குவிப்பு தடுப்பு தீர்வை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரான், ஓமன், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கால்சியம் கலக்கப்பட்ட ஜிப்சம் உப்புத்தூள் மீதும் 5 ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு தீர்வை விதிக்கப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்த பொருள்களின் மொத்த மதிப்பு 12.26 பில்லியன் டாலர்.

அதே காலத்தில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு 402.33 பில்லியன் டாலர்.

சீனாவுடனான ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் இந்தியத் தரப்பு 30.7 பில்லியன் டாலர் பற்றாக்குறையில் உள்ளது.