தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

பதிவு செய்த நாள் : 25 நவம்பர் 2021 15:26

சென்னை,

தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்பொழுதுள்ள சூழ்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுவதர்க்கு வாய்ப்பில்லை.

இந்த மேலடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகை ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

கடலூர், அரியலூர், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

ஏனைய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும்,

உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யவாய்ப்பு உள்ளது

நவம்பர் 25ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிககனமழை பெய்யக்கூடும்.

சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதியில் குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும்  சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

இவ்வாறு, சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.