காசி விஸ்வநாதர் ஆலய தாழ்வாரத் திட்டத்தை டிச. 13ல் பிரதமர் மோடி துவக்குகிறார்

பதிவு செய்த நாள் : 12 நவம்பர் 2021 19:37

புதுடெல்லி, நவம்பர் 12,

ரூ.600 கோடி செலவில் திருத்தி புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் மற்றும் அதன் சுற்றுப் பிரகாரம், சுற்றுப் பிரகாரத்தில் இருந்து நேரடியாக கங்கையில் இறங்குவதற்கான நடைபாதை ஆகியவற்றை இந்திய பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் மாதம் 13ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.

2022ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில் காசி விசுவநாதர் ஆலயம் திருத்தி அமைக்கப்பட்டு துவக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

காசி விஸ்வநாதர் ஆலயத்தை திருத்தி அமைப்பதற்காக ஆலயத்தை சுற்றி இருந்த வீடுகளில் இருந்து சுமார் 400 குடும்பத்தினர் வெளியேற்றப்பட்டனர் அவர்களுக்கு மாற்று வீடுகளும் அளிக்கப்பட்டன.

அந்த 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் இப்பொழுது திருத்தி அமைக்கப்பட்ட ஆலயம் துவக்க விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 13ஆம் தேதி இந்தியா முழுவதிலும் உள்ள 12 ஜோதிர்லிங்க ஆலயங்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வருவார்கள் அவர்கள் தங்களுடன் தங்கள் பகுதியில் உள்ள நதி தீர்த்தத்தை கொண்டுவருவார்கள். அந்த தீர்த்தங்களை கொண்டு காசி விஸ்வநாதர் ஆலயம் தூய்மை படுத்தப்படும்.

காசி விஸ்வநாதர் ஆலயத்தின் சுற்றுப்பிரகாரத்தில் ஒரு அருங்காட்சியகம் நூலகம் யாத்ரீகர்களுக்கான உதவி மையம், முமுக்ஷ பவன் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. ஆலய துவக்க விழா அன்று காசி விஸ்வநாதர் ஆலயம்‌ தொடர்பான ஒலி-ஒளி காட்சி ஒன்று அமைக்கப்படும்.

கோவில் சுற்று பிரகாரம் 320 மீட்டர் நீளமும்  20 மீட்டர் அகலமும் கொண்டதாக அமையும். சுற்றுப்பிரகாரத்தில் இருந்து கங்கை படித்துறைக்கு  செல்லும் பாதையும் படித்துறையும் வண்ண விளக்குகளினால் அலங்காரம் செய்யப்படும்.