சம்பா, தாளடி, பிசான நெல் சாகுபடியில் விவசாயிகள், அலுவலர்களுக்கு வேளாண்மை துறையின் ஆலோசனைகள்

பதிவு செய்த நாள் : 14 அக்டோபர் 2021 11:30

சென்னை

தமிழ்நாட்டில் 31 இலட்சம் ஏக்கரில் (காவிரி டெல்டா மாவட்டங்களில் 12.88 இலட்சம் ஏக்கரிலும், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில் 18.12 இலட்சம் ஏக்கரிலும்) நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவத்தில் கிடைக்கும் மழையினை ஒட்டி சம்பா, தாளடி, பிசான நெல் சாகுபடி கிட்டத்தட்ட 31 இலட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுவதால், விவசாயிகள் பின்பற்றவேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றியும், விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் விரிவாக்க அலுவலர்கள் பணியாற்றுவதற்கான அறிவுரைகள் பற்றியும் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

சம்பா, தாளடி, பிசான நெல் சாகுபடியில் விவசாயிகள் மற்றும் அலுவலர்களுக்கான ஆலோசனைகள் குறித்த செய்தி வெளியீடு

தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கையில் 2021-2022 ஆம் ஆண்டில் உணவுதானிய உற்பத்திக்கான இலக்கு 125 இலட்சம் மெட்ரிக் டன் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 75 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி என்பதால், நெல் சாகுபடிப்பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

குறுவை நெல் சாகுபடி

நடப்பாண்டில், மேட்டூர் அணை சூன் 12 ஆம் தேதி திறந்துவிடப்பட்டதாலும், அணை திறப்பதற்கு முன்பே அனைத்து கால்வாய்களும் தூர்வாரப்பட்டதாலும், காவிரி டெல்டா  மாவட்டங்களில் நடப்புக்குறுவைப் பருவத்தில் 4.9 இலட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இது, கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத சாதனையாகும். டெல்டா அல்லாத இதர மாவட்டங்களைப் பொறுத்தவரை, நீண்ட காலத்திற்குப்பிறகு தென்மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து முதல்பருவ நெல் சாகுபடிக்காக நீர் திறந்துவிடப்பட்டதாலும், நடப்பாண்டில் ஜனவரி முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கிடைத்த மழையினால் மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்ததாலும், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில் 5.24 இலட்சம் ஏக்கரில் முதல்பருவ நெல் சாகுபடி செய்யப்பட்டது. ஆக மொத்தம் மாநில அளவில், கார், குறுவை, சொர்ணவாரிப் பருவத்தில் 10.14 இலட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, ஏறக்குறைய 78 சதவிகிதப் பரப்பில் அறுவடை முடிவடைந்துள்ளது. மீதமுள்ள பரப்பும் வரும் நாட்களில் அறுவடை முடிந்து விடும்.

சம்பா நெல் சாகுபடி

தமிழகத்தில் ஆண்டுமுழுவதும், நெல் சாகுபடி செய்யப்பட்டாலும், சம்பா, தாளடி மற்றும் பிசானப் பருவத்தில்தான் அதிகப் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மேட்டூர் அணையிலிருந்து பெறும் தண்ணீரையும், தென் மாவட்ட அணைகளிலிருந்து பெறும் தண்ணீரையும், இராமநாதபுரம், சிவகங்கை போன்ற மாவட்டங்களில் ஏரிகள், குளங்களிலிருந்து கிடைக்கும் தண்ணீரையும், வடமாவட்டங்கள் உள்ளிட்ட இதர மாவட்டங்களில் முற்றிலும் நிலத்தடி நீரையும் நம்பி சம்பா, தாளடி மற்றும் பிசானப் பருவத்தில், மாநில அளவில் ஒட்டு மொத்தமாக 31 இலட்சம் ஏக்கரில் (காவிரி டெல்டா மாவட்டங்களில் 12.88 இலட்சம் ஏக்கரிலும், டெல்டா அல்லாத இதர மாவட்டங்களில் 18.12 இலட்சம் ஏக்கரிலும்) நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவத்தில் கிடைக்கும் மழையினை ஒட்டி சம்பா, தாளடி, பிசான நெல் சாகுபடி கிட்டத்தட்ட 31 இலட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்படுவதால், விவசாயிகள் பின்பற்றவேண்டிய தொழில்நுட்பங்கள் பற்றியும், விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் விரிவாக்க அலுவலர்கள் பணியாற்றுவதற்கான அறிவுரைகள் பற்றியும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை விரிவான ஆலோசனைகளை கீழ்க்கண்டவாறு வழங்குகிறது.

சம்பா நெல் சாகுபடிக்கான அறிவுரைகள்

1.    நெல் இரகங்கள்: நீண்ட நாள் வயதுடைய அதாவது 140 முதல் 155 நாட்கள் வயதுடைய சிஆர் 1009, சிஆர் 1009 சப்1, ஆடுதுறை 44, ஆடுதுறை 50, ஆடுதுறை 51 போன்ற இரகங்களை செப்டம்பர் முதல் வாரத்திலேயே விதைக்க வேண்டும். செப்டம்பர் இறுதி வாரத்திற்குப்பிறகு, 125 முதல் 130 நாட்கள் வயதுடைய மத்திய கால நெல் இரகங்கள் அதாவது ஆடுதுறை 38, ஆடுதுறை 39, ஆடுதுறை 46, ஆடுதுறை 49, கோ 43, கோ 52, திருச்சி3, வெள்ளைப் பொன்னி, டிகேஎம்13, விஜிடி1, என்எல்ஆர்34449, ஆர்என்ஆர்15048 போன்ற இரகங்களை பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். இந்த இரகங்களை பயன்படுத்தினால் மட்டுமே, அக்டோபர் மூன்றாம் வாரம் முதல் டிசம்பர் முதல் வாரம் வரை பெய்யும் வடகிழக்குப் பருவ மழையினால் பயிர்கள் பாதிப்படையாமல் இருக்கும்.

2.    நேரடி நெல் விதைப்புக்கு அதிக முக்கியத்துவம்: வழக்கமாக மேற்கொள்ளும் நடவு முறையில் நாற்றங்கால் அமைப்பதற்கும், நடவுவயல் தயார் செய்வதற்கும், அதிகளவு நீர் தேவைப்படுவதால், சம்பா பருவத்தில் நேரடி நெல் விதைப்பு முறையினை விவசாயிகள் மேற்கொள்ளலாம். அனைத்து இரகங்களையும் நேரடி நெல் விதைப்பு முறையில் விதைக்கலாம். இதனால், பாசன நீர் மிச்சமாகும் என்பதுடன், பயிர் கிட்டத்தட்ட 15 நாட்கள் முன்கூட்டியே அறுவடைக்கு வரும். எனவே, வேளாண் விரிவாக்க அலுவலர்கள் இதுகுறித்து கிராம அளவில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்.

a.    நேரடி நெல் விதைப்பிற்காக நிலத்தினை உழும் போது, நிலம் சமமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். 

b.    வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், தங்கள் பகுதிகளில் போதுமான எண்ணிக்கையில், டிராக்டர்கள், நடவு இயந்திரங்கள் மற்றும் விதைப்பு இயந்திரங்கள் இருப்பதை உறுதி  செய்ய வேண்டும்.

c.    நேரடி நெல் விதைப்புக்குத் தேவையான விதைப்பு இயந்திரங்களை வேளாண் பொறியியல் துறை மூலமாகவோ அல்லது தனியார் மூலமாகவோ ஏற்பாடு செய்ய வேண்டும்.

d.    நேரடி நெல் விதைப்புக்கு ஏக்கருக்கு 24 கிலோ விதை போதுமானது. விதைப்புக்கு முன் பூசணக் கொல்லி மருந்து, சூடோமோனாஸ் மற்றும் அசோஸ்பைரில்லம் போன்ற உயிர் உரங்களுடன் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பது நல்லது.

3.    உர நிர்வாகம்: கடைசி உழவுக்கு முன், ஏக்கருக்கு 200 கிலோ ஜிப்சம், 10 கிலோ துத்தநாக சல்பேட், 10 கிலோ நெல் நுண்ணூட்டக்கலவை உரங்களை அடி உரமாக போட வேண்டும். இரசாயன உரங்களை மண்பரிசோதனை முடிவின்படி அளிக்க வேண்டும். மண் ஆய்வு மேற்கொள்ளாத நிலையில், ஏக்கருக்கு 60 கிலோ தழைச்சத்து, 20 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய இரசாயன உரங்களை பயன்படுத்தினால் போதுமானது. மணிச்சத்து உரத்தை முழுவதுமாக அடிஉரமாகவும், தழை மற்றும் சாம்பல் சத்து உரங்களை மூன்று முறை பிரித்து அதாவது தூர் கட்டும் பருவம், தண்டு உருளும் பருவம், பூப்பருவத்திலும் மேலுரமாக இடவேண்டும். எக்காரணம் கொண்டும் தேவைக்கு அதிகமாக இரசாயன உரங்களை பயன்படுத்தக்கூடாது. முக்கியமாக யூரியா போன்ற தழைச்சத்து உரங்களை தேவைக்கு அதிகமாக பயன்படுத்தினால், பூச்சி, நோய் தாக்குதல் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.

a.    விரிவாக்க அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் கடைகளில் போதுமான அளவு இரசாயன உரங்கள் இருப்பு வைப்பதற்கு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4.    சிக்கன நீர் நிர்வாகம்: நீர் மேலாண்மை என்பது நெற்பயிருக்கு மிகவும் அவசியம். பாய்ச்சிய பாசன நீர் வயலில் மறைந்தவுடன் மீண்டும் நீர் பாய்ச்சினால் போதுமானது. கதிர் வெளிவரும் பருவம், பூப்பருவம் மற்றும் பால்பிடிக்கும் பருவத்தில் நெல் வயலில் 2 செமீ அளவுக்கு நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தேவைக்கும் அதிகமாக பாசன நீரை பயன்படுத்துவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.

5.    மழைநீர் சேமிப்பு: தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகள் மூலமாகவும் தனிப்பட்ட முறையிலும் அமைக்கப்பட்டுள்ள பண்ணைக்குட்டைகளில் மழைநீரினையும், ஆற்று நீரினையும் சேமித்து வைத்து பயிர்களுக்கு தேவைப்படும் நேரத்தில் பயன்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

6.    பூச்சி நோய் கண்காணிப்பு: நெல் நடவு அல்லது விதைப்பு முடிந்தவுடன், ஒவ்வொரு கிராமத்திலும், பூச்சி நோய் கண்காணிப்புத்திடல் அமைக்க வேண்டும். வாரம் ஒரு முறை பூச்சி, நோய் தாக்குதல் குறித்து இத்திடலை கூர்மையாக ஆய்விட வேண்டும். தாக்குதல் ஏதும் இருந்தால், விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய அனைத்து ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகள் குறித்தும் கிராமங்களில் வயல்வெளிப் பள்ளிகள் மூலமாகவோ, விவசாயிகள் பயிற்சியின் போதோ அல்லது இதர விரிவாக்க முறையிலோ விவசாயிகளுக்கு தெளிவாக விளக்க வேண்டும். ஆங்காங்கே விளக்குப் பொறி வைத்தும் பூச்சி நடமாட்டத்தை கண்காணிக்கலாம்.

7.    பயிர்க் காப்பீடு: சம்பா, தாளடி, பிசானப் பருவத்தில் வடகிழக்குப் பருவ மழையினால் வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் பயிர்ப் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதால், அனைத்து விவசாயிகளும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பதிவு செய்வதற்கு விரிவாக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான அரசாணையினையும், போதுமான நிதியினையும் மாநில அரசு வழங்கி உள்ளது. காப்பீடு செய்யும் போது, அடங்கல் பதிவின்படி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலோ அல்லது பொது சேவை மையம் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம். எக்காரணம் கொண்டும், விவசாயிகள் தங்கள் பயிரை ஒரு முறைக்கு மேல் காப்பீடு செய்யக்கூடாது என்பதை விரிவாக்க அலுவலர்கள் விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

8.    நெல்லுக்கான ஊக்கத்தொகை அதிகரிப்பு: நெல் விவசாயிகள் உற்பத்தி செய்ய நெல்லுக்கு இலாபகரமான விலை கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில், 2021-2022 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் நெல்லுக்கான ஊக்கத்தொகையினை உயர்த்தி அறிவித்துள்ளது. சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு  ரூ.100/-ம்  சாதாரண ரகத்திற்கு ரூ.75/-ம் ஊக்கத் தொகையாக வழங்கப்படுவதால், நெல்லுக்கான கொள்முதல் விலையானது சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2060/- ஆகவும், சாதாரண ரகத்திற்கு ரூ2015/- ஆகவும் அரசு நிர்ணயித்துள்ளது. எனவே, நடப்பு சம்பாப் பருவத்தில் அனைத்து தொழில்நுட்பங்களையும் பின்பற்றி, நெல் உற்பத்தியை உயர்த்தி, அதன் மூலம் வேளாண்பெருமக்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு வேளாண் விரிவாக்க அலுவலர்கள் சீரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.