தமிழகத்தில் பனை மேம்பாட்டுத் திட்டம் - முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 17:04

சென்னை

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அவர்கள் பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 இலட்சம் பனை விதைகளை வேளாண் துறைக்கு வழங்குவதை குறிக்கும் விதமாக பனை விதைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று (17.9.2021) வழங்கினார்.

1 இலட்சம் பனை விதைகள், ஏரிக்கரை, சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் நடவு செய்யும் பனை மேம்பாட்டு திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:

தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தற்போதுள்ள பனைமரங்களைப் பாதுகாப்பதுடன், கூடுதலாக பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, நடப்பாண்டு 30 மாவட்டங்களில், 76 இலட்சம் பனை விதைகளையும், 1 இலட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று 2021-22ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தனி நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு அவர்கள் 1 இலட்சம் பனை விதைகளை வழங்குவதாக வேளாண் நிதிநிலை அறிக்கையின்போது உறுதி அளித்தார். அதன்படி, சட்டப்பேரவை தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட 1 இலட்சம் பனை விதைகள், ஏரிக்கரை, சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் நடவு செய்யும் பனை மேம்பாட்டு திட்டம் இன்று முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் ஏ. அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர். பிருந்தாதேவி, வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் ஸ்வரன் குமார் ஜடாவத், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.