சென்னை நகர காவல்துறைக்கு நடமாடும் வெடிகுண்டு சோதனை வாகனம்: கமிஷனர் சங்கர்ஜிவால் திறந்து தொடங்கி வைத்தார்

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 16:18

சென்னை

சென்னை நகர காவல் பிரிவிற்கு புதியதாக TATA Winger Vehicle Mobile X-Ray Baggage Scanner என்ற வாகனத்தை  தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த வாகனத்தை காவல்துறை பயன்பாட்டிற்காக நேற்று (16.09.2021) சென்னை பாதுகாப்பு பிரிவிற்கு கமிஷனர் சங்கர் ஜிவால் வழங்கினார்.

சென்னை நகர தலைமையிட கூடுதல் கமிஷனர் லோகநாதன், வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தார்கள். முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பின் போது விழா நடைபெறும் இடங்களுக்கு சென்று விழாவிற்கு வருகை தரும் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கொண்டுவரும் கைப்பை மற்றும் பிற பொருட்களை ஆய்வு செய்வதற்கு இந்த வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த நடமாடும் ஊடுகதிர் வாகனத்தின் மதிப்பு ரூ. 32 லட்சத்து 99 ஆயிரம். இது பொதுமக்களின் கைப்பை மற்றும் உடைமைகளை பிரித்து பார்க்காமலே அதனுள் இருக்கும் பொருட்களை (வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள்) ஆய்வு செய்து கண்காணிப்பு திரை மூலமாக கண்டறியமுடியும். போலீசாரின் பணிச்சுமையை குறைப்பதோடு குறைந்த நேரத்தில் பொதுமக்களின் அதிக உடைமைகளை சோதனை செய்ய உதவுகிறது. இவ்வாகனம் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணியை மேற்கொள்ள மிகவும் உபயோகம் உள்ளதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.