மத்திய அரசின் மீன்வள பாதுகாப்பு சட்டம் மீனவர்களை பாதுகாக்கவே கொண்டு வரப்படுகிறது - மத்திய இணையமைச்சர் முருகன்

பதிவு செய்த நாள் : 17 செப்டம்பர் 2021 15:19

சென்னை

மத்திய அரசின் மீன்வள பாதுகாப்பு சட்டம் மீனவர்களை பாதுகாக்கவே கொண்டு வரப்படுகிறது. இதனால் பாரம்பரிய மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது, மத்திய அரசின் கடலோர ஒழுங்கு முறை சட்டமசோதா ஆய்வு அடிப்படையில் தான் இருக்கிறது என்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மத்திய இணையமைச்சர் முருகன் இன்று விளக்கமளித்துள்ளார்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பாக அமைச்சர் முருகன் ஆய்வு நடத்தினார், மீனவர் அமைப்புகளுடன் கலந்துரையாடி அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமளித்து அவர் கூறுகையில்,

மத்திய அரசின் மீன்வள பாதுகாப்பு சட்டம் மீனவர்களை பாதுகாக்கவே கொண்டு வரப்படுகிறது. இதனால் பாரம்பரிய மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது.எந்தவொரு மீனவர்களுக்கும் கிஞ்சிற்றும் தீங்கு விளைவிக்காதவகையில் இந்த சட்டம் கொண்டுவரப்படும்.வெளிநாட்டு கப்பல்களை கட்டுபடுத்துவதற்காகவே இந்த சட்டம். மேலும் இந்த மசோதா, முழுக்க முழுக்க கலந்தாய்வில், பரிசீலனையில் தான் இருக்கிறது.இது குறித்து நாடு முழுவதும் மீனவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படுகின்றன.௴னவர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

மீனவர்கள் நல்ல ஆலோசனைகளை கூறியிருக்கீறீர்கள். மீனவர்கள் எப்போது வேண்டுமானாலும் என் வீட்டுக்கே நேரடியாக வரலாம். மீனவர்கள் பயப்பட தேவையில்லை என்றார் அவர்.

இந்த கலந்துரையாடலில் மீனவர் விசைப்படகு கூட்டமைப்பை சேர்ந்த குப்பன், கபிலன், தேசிங்கு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சரமாரியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். மத்திய இணையமைச்சர் முருகன் அவற்றிற்கு பொறுமையாக விளக்கமளித்தார்