புதுச்சேரியில் அரசின் சலுகைகள், ஊதியம் பெற கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும் – துணை ஆளுநர் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 16 செப்டம்பர் 2021 16:13

புதுச்சேரி

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகைக்கான அரசின் சலுகைகள் பெறுவதற்கும், அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுவதற்கும், உதவிகள் பெறுவதற்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் கட்டாயம் தேவை என ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இன்று தெரிவித்துள்ளார்.

26-வது வாராந்திர கோவிட் மேலாண்மை சீராய்வுக் கூட்டம் இன்று (16-09-2021) புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.

சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமலு புதுச்சேரியில் கொரோனா தொற்று குறித்த நிலவரம், தடுப்பூசி செலுத்தும் விகிதம் ஆகியவை குறித்து படக்காட்சி மூலம் விளக்கினார்.

தலைமைச் செயலர் அஸ்வனி குமார், கூடுதல் காவல் துறை இயக்குனர் ஆனந்த மோகன், வருவாய்த்தறைச் செயலர்  அஷோக் குமார், உள்ளாட்சித்துறைச் செயலர் வல்லவன், செய்தித்துறைச் செயலர் உதயகுமார், சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர். அருண், துணைநிலை ஆளுநரின் செயலர் அபிஜித் விஜய் சௌதரி, ஜிப்மர் இயக்குநர் டாக்டர் ராஜேஷ் அகர்வால், மாநில கோவிட் மேலாண்மை பொறுப்பதிகாரி டாக்டர் ரமேஷ், உலக சுகாதார நிறுவனத்தின் பிரதிநிதி டாக்டர் சாய்ரா பானு, கோவிட் மேலாண்மை பொறுப்பு அதிகாரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அதிகாரிகள் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய துணைநிலை ஆளுநர் பின்வரும் கருத்துகளை வலியுறுத்தினார்.

• கொரேனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்துவது.

• அக்டோபர் 2-ஆம் தேதிக்குள் புதுச்சேரியை 100% தடுப்பூசி போட்ட மாநிலமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது.

• தீபாவளி சிறப்புகள், அரசு சலுகைகள், உதவிகள் பெற கட்டாயம் தடுப்பூசி சான்றிதழ் வேண்டும், என்ற விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் செல்வது,

• குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது. அதற்காக சமூக ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

• தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்களை பணியில் ஈடுபடுத்துவது.

இவ்வாறு, துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.