மோட்டார் வாகனம், ட்ரோன்கள் துறைக்கு ரூ 26058 கோடி ஊக்குவிப்புத் திட்டம் அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 15 செப்டம்பர் 2021 19:35

புது தில்லி, செப்டம்பர் 15,

மோட்டார் வாகனத்துறை மற்றும் ஆளில்லா விமானத்துறைக்கு உற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்புத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல வழங்கி உள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ 26058 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனத் துறையில் மோட்டார் வாகன உதிரி உறுப்புகள் உற்பத்தித் துறையும் இணைந்த்தாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவு பற்றிய இத்தகவலை மத்திய அமைச்சர் அனுராக் தாகுர் வெளியிட்டார்.

இந்திய மோட்டார் வாகனத்துறைக்கு நவீனத் தொழில் நுட்பம் கிடைக்க உற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்புத்திட்டம் உதவும் என அமைச்சர் அனுராக் தாகுர் தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் மோட்டார் வாகனத்துறை, மோட்டார் வாகன உதிரி உறுப்புகள் உற்பத்தித் துறை மற்றும் ஆளில்லா விமானத்துறைகளுக்கு உற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்புத்திட்டம் மூலம் ரூ.26058 கோடி கிடைக்கும் என்று அமைச்சர் அனுராக் தாகுர் கூறினார்.

இதனால் மோட்டார் வாகனத் துறை, மோட்டார் வாகன உதிரி உறுப்புகள் உற்பத்தித் துறைக்கு ரூ.42500  கோடி புதிய முதலீடாக கிடைக்கும். இதன் மூலம் உற்பத்தி மதிப்பு ரூ.2.3 லட்சம் கோடியாக உயரும்.கூடுதலாக 7.5 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என அமைச்சர் அனுராக் தாகுர் கூறினார்.

2021-22 ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 13 துறைகளில் ரூ.1.97 லட்சம் கோடிக்கான உற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்புத்திட்டத்தை அமல் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

பேட்டரி மூலம் மின்சார வாகனங்களுக்கும் ஹைடிரஜன் எரிபொருள் வாகனங்களுக்கும் என விற்பனை மதிப்போடு இணைந்த ஒரு திட்டமும் மற்ற மோட்டார் வாகனங்களுக்கு என தனித் திட்டமும் அமல் செய்யப்படும் எனஅமைச்சர் அனுராக் தாகுர் கூறினார்.

மின்சார வாகன உற்பத்தி, நவீன கெமிக்கல் பேட்டரி உற்பத்திக்கென தனிஉற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்புத்திட்டங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன.

ட்ரோன்களுக்கான உற்பத்தியோடு இணைந்த ஊக்குவிப்புத்திட்டம் 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்றும் அமைச்சர் அனுராக் தாகுர் தெரிவித்தார்.