ஓணம் பண்டிகை - ஓபிஎஸ், இபிஎஸ் வாழ்த்து

பதிவு செய்த நாள் : 20 ஆகஸ்ட் 2021 13:16

சென்னை

ஓணம் பண்டிகை நாளை (ஆகஸ்ட் 21) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாரம்பரியமிக்க சிறப்பு திருவிழாவாக கேரளா மற்றும் தென்தமிழகத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை (ஆகஸ்ட் 21) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்ட வாழ்த்து செய்தி விவரம் வருமாறு:

திருஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எங்களது ஓணம் திருநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.

திருமால் வாமன அவதாரம் பூண்டு மகாபலி சக்கரவர்த்தியை அடக்கி, பின்னர் அம்மன்னன் வேண்டிய வண்ணம் மக்கள் அனைவரும் எப்போதும் சுபிட்சமாக இருக்கவும், அவர்களை ஆண்டுதோறும் காண வேண்டும் என்ற அவரது விருப்பத்தையும் ஏற்று அருள் புரிந்தார். அதன்படி மகாபலி சக்கரவர்த்தி மக்களைக் காண வரும் நன்நாளே திருவோணம் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது.

அன்பு, அமைதி, சகோதரத்துவம் வளர்க்கப்பட வேண்டும்; அகந்தையும், ஆணவமும் அகற்றப்பட வேண்டும்' என்கிற உயரிய கருத்தினை அனைவரும் அறியும் வகையில், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இதயம் களிந்த ஓணம் திருநாள் நல்வாழ்ந்துகள்.

இவ்வாறு, ஓபிஎஸ், இபிஎஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.