பக்ரீத் திருநாள் வாழ்த்து - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

பதிவு செய்த நாள் : 20 ஜூலை 2021 18:09

சென்னை

பக்ரீத் பண்டிகை புதன் கிழமை (21-7-2021) அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் பக்ரீத்  திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தி விவரம்:

’தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் தியாகப் பெருநாளான பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை இதயபூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும்; அறநெறிகள் தவறாமல் வாழ்ந்திட வேண்டும்’ என்ற உயரிய கோட்பாடுகள் இரண்டும் இஸ்லாமிய மக்களின் கண்ணின் மணிகளாக என்றும் இருந்து வருகின்றன. நபிகள் நாயகம் அளித்த போதனைகள், தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கடைப்பிடிக்க வேண்டிய உன்னதமான நோக்கங்கள் என்பதை உணர்ந்துள்ள அவர்கள், அதன் வழி நின்று – அடி பிறழாமல் பின்பற்றி – இந்தப் பக்ரீத் பண்டிகையை ஆண்டுதோறும் கொண்டாடுகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

‘ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகளுக்கு – பிறகு நண்பர்களுக்கு – அடுத்துத்தான் தங்களுக்கு’ என்ற கொள்கையின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து – பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும் – மனித நேயத்தையும் இஸ்லாமியப் பெருமக்கள் வெளிப்படுத்தும் விதமாக, பக்ரீத் பண்டிகை நாளன்று ஏழை – எளிய மக்களுக்கு உதவிகளை வாரி வழங்குகிறார்கள்.

நபிகள் நாயகத்தின் போதனைகளுக்குச் சிறப்பும், பெருமையும் சேர்க்கும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இந்தத் தியாகப் பெருநாளை மகிழ்ச்சியுடனும்; கொரோனா ஊரடங்குக் கட்டுப்பாடுகளைப் பின்பற்றியும் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டும் கொண்டாடிட வேண்டும் என்று வேண்டி, பக்ரீத் பெருநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்’

இவ்வாறு, முதலமைச்சரின் பக்ரீத் வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.