ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 07 ஏப்ரல் 2021 16:11

புதுடில்லி,

இந்தியாவில் கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் நிலவும் நிச்சயமற்ற சூழல் காரணமாக ரெப்போ வட்டி விகிதத்தில் இந்த ஆண்டு மாற்றம் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கோவிட் 19 வைரஸ் தொற்றின் 2வது அலை காரணமாக, மாநில அரசுகள் விதித்த கட்டுப்பாடுகளால் உள்நாட்டு வளர்ச்சியில் நிச்சயமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த நடப்பு நிதிஆண்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டுள்ளது. மூன்று நாட்கள் நடைபெற்ற ரிசர்வ் வங்கி கொள்கை குழு கூட்டத்திற்கு பின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்களிடம்  கூறுகையில் :

2021-22ம் நிதியாண்டிற்கான ஒட்டுமொத்த உள்நாட்டு வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளோம். சந்தைகளில் போதுமான பணப்புழக்கம் நிலவும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும்.

மாநில அளவிலான ஊரடங்குகள் சமீபத்திய தேவை நிலைமைகளின் முன்னேற்றத்தைக் குறைத்து பொருளாதார சூழ்நிலை இயல்புநிலைக்கு திரும்புவதை தாமதப்படுத்தும்.

இதனால் குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இந்த ஆண்டும் ரெப்போ வட்டி 4 சதவீதமாகவே தொடரும். அதேபோல் ரிவர்ஸ் ரெபோ வட்டி வகிதமும் 3.35 சதவீதமாகவே இருக்கும் என்றும் சக்திகாந்த தாஸ் கூறினார்.