பிரான்சில் சுமார் 400 விளையாட்டு பயிற்சியாளர்கள் மீது பாலியல் வன்கொடுமை புகார்

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2021 21:34

பாரிஸ்,

பிரான்சில் விளையாட்டுத்துறையில் பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில் 400க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது தெரியவந்துள்ளது.

பத்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரபல பிரெஞ்சு ஸ்கேட்டிங் வீராங்கனையான சாரா அபிட்போல் ஒரு புத்தகத்தில் கடந்த 1990-92ம் ஆண்டுகளில், அவர் பதின்வயதில் இருந்தபோது, பயிற்சியாளர் கில்லஸ் பேயரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து அவரது குற்றச்சாட்டு தொடர்பாக பயிற்சியாளர் கில்லஸ் பேயர் மீது விசாரணை துவங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சாராவின் குற்றச்சாட்டுகள் வெளியானதை அடுத்து, பல ஸ்கேட்டிங் வீராங்கனைகள் தங்கள் பயிற்சியாளர்களிடமிருந்து பாலியல் வன்முறைகளை எதிர்க்கொண்டதாக தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து பிரான்ஸ் விளையாட்டு அமைச்சகம் விளையாட்டு வீரர்களின் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய ஒரு பிரத்யேக தளத்தை அமைத்து, ஒரு ஆண்டு விசாரணைகளை நடத்தியது.

விசாரணையில் 400க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் எழுந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சிலர் வீராங்கனைகளை துன்புறுத்தியதும் சிலர் இந்த குற்றச்சாட்டுகளை மறைக்க முயற்சித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில், 96 சதவீதம் பேர் ஆண்கள். பாதிக்கப்பட்டவர்களில், 83 சதவீதம் பெண்கள், 63 சதவீதம் பேர் 15 வயதிற்குட்பட்டவர்கள் என்று பிரான்ஸ் விளையாட்டு அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 60 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 100 க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் உள்ளூர் வழக்குகள் நடந்து வருகின்றன.

இந்த குற்றங்கள் வெளிவரவும் விழிப்புணர்வு ஏற்படவும் காரணமாக இருந்த சாரா அபிட்போலின் வாக்குமூலம் பிரெஞ்சு விளையாட்டுக்கான ஒரு வரலாற்று தருணம் என்று தன் அறிக்கையில் விளையாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மேலும் இந்த விவகாரத்தை தொடர்ந்து தன்னார்வ பயிற்சியாளர்கள் உட்பட விளையாட்டு பயிற்சியாளர்களின் பின்புலன் குறித்து கடுமையாக பரிசோதனை செய்யும் புதிய சட்டம் வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.