சென்னையில் வாக்கு மையங்களில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரில் ஆய்வு

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2021 20:19

சென்னை, 

சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இன்று சென்னையில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு சென்று தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் வாக்குப்பதிவினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சென்னையில் இன்று தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது. வாக்கு மையங்களில் சென்னை நகர காவல் அதிகாரிகள், ஆளிநர்கள், மத்திய துணை ராணுவப் படையினர், ஊர்காவல் படையினர், ஓய்வு பெற்ற காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள், சென்னை பெருநகரிலுள்ள வாக்குச்சாவடிகளில் தகுந்த பாதுகாப்பு பணிகளுக்காக அலுவல் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபட்டனர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் சென்னை, கீழ்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள

புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலை பள்ளி, மயிலாப்பூர் உருது ஆண்கள் தொடக்கப்பள்ளி, ராயப்பேட்டை  இந்திய அலுவலர்கள் சங்க வளாகம், மயிலாப்பூர் சாந்தோம் உயர்நிலை பள்ளி, ராஜா அண்ணாமலைபுரம் ராணி மெய்யம்மை பெண்கள் உயர்நிலை பள்ளி ஆகிய இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு மேற்கொண்டார். 

அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கினார்.

 தளராது பணி செய்துவரும் காவல் மற்றும் இதர ஆளிநர்களுக்கு பிஸ்கட், குடிநீர் பாட்டில்கள் வழங்கினார். மேலும் வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எவ்வித இடையூறும் இல்லாமல், வரிசையில் நின்று வாக்களிக்க போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்தார். மேலும் சரக அதிகாரிகள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், தேர்தல் பணி செய்து வரும் காவல் அதிகாரிகள், ஆளினர்களின்   நலனை கருத்தில் கொண்டு உரிய வசதிகள் செய்யவும் அறிவுரை வழங்கினார்.