கார்ப்பரேட் வரியை உயர்த்த அமெரிக்க அதிபர் திட்டம்

பதிவு செய்த நாள் : 06 ஏப்ரல் 2021 16:34

வாஷிங்டன்-ஏப்-6

அமெரிக்காவில் கார்ப்பரேட் கம்பெனிகள் செலுத்தவேண்டிய வரி விகிதத்தை உயர்த்தப் போவதாகவும் அந்த உயர்வு காரணமாக கார்ப்பரேட் கம்பெனிகள் அமெரிக்காவை விட்டு வெளியேறாது என்று நம்புவதாகவும் அமெரிக்க அதிபர் ஜோ பிடேன் தெரிவித்தார்.

வார விடுமுறைக்காக கேம்ப் டேவிட் சென்றிருந்த அதிபர் வெள்ளை மாளிகைக்கு திரும்பிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் அப்பொழுது கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வரியை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

முன்பு கார்ப்பரேட் கம்பெனிகள் 36 சதவீதம் வரி செலுத்தின. இப்பொழுது இந்த வரி அளவு 21 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது கார்ப்பரேட் கம்பெனிகளின் வரியை குறைத்துக் கொண்டே போவது அபத்தமான கருத்து. நாங்கள் கார்ப்பரேட் கம்பெனிகளுக்குகான வரி அளவை 28 சதவீதமாக உயர்த்தலாமா என்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம்.

அமெரிக்காவில் உலகின் முதல் இடத்தில் உள்ள 500 கம்பெனிகளில் கிட்டத்தட்ட 52 கம்பெனிகள் அமெரிக்காவில் உள்ளன.  இந்தக் கம்பெனிகள் கடந்த 3 ஆண்டுகளாக ஒரு பென்னி கூட வரி செலுத்தவில்லை. இது விசித்திரமாக உங்களுக்குத் தோன்றவில்லையா?

நாம் யதார்த்தமாக சிந்திக்கவும் செயல்படவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

தொழில் துறையில் மற்ற நாடுகளுடன் அமெரிக்கா போட்டியிடும் நிலையை அடைய வேண்டும். அதற்காக தீவிரமாக முயற்சி செய்ய முடிவு செய்திருக்கிறோம்.

அமெரிக்காவை சுற்றியுள்ள எல்லா நாடுகளும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல நூறு கோடி டாலர்களை முதலீடு செய்கிறார்கள் .அதே பணியை நாங்களும் செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடேன் கூறினார்.

நிதியமைச்சர்

உலக விவகாரங்களுக்கான சிக்காக்கோ கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா நிதியமைச்சர் ஜானெட் யெல்லன் பேசும்பொழுது கார்ப்பரேட் கம்பெனி களுக்கான வரி விகிதம் பற்றிப் பேசினார். அவர் கூறியதாவது: 


உலகில் உள்ள நாடுகளில் எல்லாம் வரியை குறைத்து ஒருவருடன் மற்றொருவர் போட்டியிடும் நிலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் . இத்தகைய போட்டி காரணமாக கார்ப்பரேட் கம்பெனிகள் செலுத்தும் வரி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான குறைந்தபட்ச வரி விகிதத்தை ஜி-20 நாடுகளுடன் கலந்து ஆலோசித்து நிர்ணயம் செய்ய நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

 கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு குறைந்தபட்ச வரி அளவு நிர்ணயிக்கப்பட்டால் உலக பொருளாதாரம் வளர்வதற்கு வாய்ப்பு ஏற்படும். எல்லா கம்பெனிகளுக்கும் சமமான ஆடுகளம் கிடைக்கும். அதன் காரணமாக தொழில்நுட்பத்தில் புதுமைகளை புகுத்துதல். வளர்ச்சி . எல்லா மக்களுக்கும் செல்வம் ஆகியவை கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்று நிதியமைச்சர் ஜானெட் யெல்லன் கூறினார்.

உலக நாடுகள் எல்லாம் பொருளாதார ரீதியாக ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு உடையவைகளாக மாறியுள்ளன.

அதனால் சந்தையை பிடிக்க வேண்டும் என்பதற்காக இந்த நாடுகளுக்கு இடையே  கடும் போட்டி நடக்கிறது. இந்த போட்டி காரணமாக அரசாங்கங்களுக்கு கார்ப்பரேட் கம்பெனிகள் செலுத்தும் வரி அளவு மிக குறைந்து விட்டது.

அமெரிக்கக் கம்பெனிகள் உலக கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டியிடும் தகுதியை பெறுவது என்றால் என்ன என்று நாம் பார்க்க வேண்டும்?

உலகிலுள்ள கார்ப்பரேட் கம்பெனிகளின் விற்றல். வாங்கல். தொழில் ரீதியாக இணைதல் ஆகிய நடவடிக்கைகளில் அமெரிக்க கம்பெனிகளின் நிலை நம்முடைய கம்பெனிகளின் போட்டியிடும் திறனை வெளிப்படுத்துகிறது.

ஒரு நாட்டில் வரி விகிதம் நிரந்தரமாக இருக்க வேண்டும் .அந்த வரிகள் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு மக்களுக்கு தேவையான நன்மைகளை செய்ய வாய்ப்பு இருக்க வேண்டும் .அரசு சிறப்பாக இயங்குவதற்கு தேவையான நிதியை அரசாங்கத்துக்கு நாட்டிலுள்ள எல்லா குடிமக்களும் தான் வழங்க வேண்டும் என்று யெல்லன் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடத்தில் இதே கூட்டத்தில் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜெ பெஸ்கி அமெரிக்க கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி விகிதம் பற்றி குறிப்பிட்டார்.

 இப்பொழுது அமெரிக்க அரசாங்கம் உயர்த்த திட்டமிட்டுள்ள வரி அளவு 2017ஆம் ஆண்டு இருந்த வரி அளவை விட குறைவானது என்று பெஸ்கி தெரிவித்தார்.