தமிழக பட்ஜெட் : எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 19:53

சென்னை,

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். மக்களின் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றாத இந்த பட்ஜெட்டால் எந்த பயனும் இல்லை என பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரன்

அமமுக கட்சி பொது செயலாளரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:

தமிழக அரசின் கடன்தொகை ஒரே ஆண்டில் ரூ.4 லட்சம் கோடியிலிருந்து ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் கவலை அளிக்கிறது.

முதல்வரின் நெடுஞ்சாலைத் துறைக்கு மட்டும் 18 ஆயிரத்து 750 கோடி ரூபாய் நிதியை வாரி வழங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை மக்களிடம் எழுப்பியிருக்கிறது. வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் குடும்பங்களுக்கான விபத்து மற்றும் ஆயுள்காப்பீடு செலவினை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகும்.

பேரிடர் காலத்தில் அழிவுக்குள்ளாகும் நெற்பயிருக்கான இழப்பீடு ஹெக்டேருக்கு ரூபாய் 13 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் முறைகேடுகளுக்கு இடம் கொடுக்காமல் செயல்படுத்துவது முக்கியமானதாகும்.

பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. மொத்தத்தில் மக்களின் எந்த எதிர்ப்பார்ப்பையும் நிறைவேற்றாத வெற்று அறிக்கையாக மட்டுமே இந்த பட்ஜெட் உள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் 

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், வாழ்க்கைக்கு உதவாத வா(பொ)ய்ப்பந்தல் பட்ஜெட். இடைக்கால நிதிநிலை அறிக்கை வாக்காளர்களைக் கவர்ந்திட பல வண்ணங்களில் அமைக்கப்பட்டுள்ள வா(பொ)ய்ப்பந்தலாகும்.

வளமார்ந்த தமிழகத்தை உருவாக்கி, மக்கள் நல வாழ்க்கைக்கான பாதை அல்ல என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 

கொரோனா பெருந்தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு துன்பத்திற்கு உள்ளாகி உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசித் திட்டத்திற்கு மத்திய அரசே நிதி ஒதுக்கீடு செய்யும் என்று எடப்பாடி பழனிச்சாமி அரசு கை கழுவி உள்ளது ஏற்கத்தக்கது அல்ல. ஆட்சியின் அந்திமக் காலத்தில் உள்ள அ.இ.அ.தி.மு.க. அரசின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தால் எந்தப் பயனும் விளையப் போவது இல்லை என வைகோ சாடியுள்ளார்.