தமிழகத்தில் 3 இல்லத்தரசிகள் கணவர்களால் கொலை

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 19:04

சென்னை,

தமிழகத்தில் மூன்று வெவ்வேறு சம்பவங்களில் மூன்று இல்லத்தரசிகள் தங்கள் கணவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர் , இரண்டு சம்பவம் காஞ்சீபுரத்திலும் மற்றும் ஒன்று குன்றத்தூரிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது.

ஜீவா என்ற 40 வயது பெண், தனது கணவர் பார்த்திபன், 43, என்பவரால் அச்சிராபக்கத்திற்கு அருகிலுள்ள அவர்களது இல்லத்தில் உயிருடன் எரிக்கப்பட்டார்.

தன்னுடன் பணியாற்றும் ஒருவருடன் மனைவி கள்ள தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் எழுந்ததால் பார்த்திபன் தன் மனைவியை கொன்றுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்துள்ள அவர்களது 19 வய்து மகள் பவித்ராவை அண்டை வீட்டார் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் சம்பவத்தில் 28 வயதான ஓட்டுநர் ஏழுமலை, தனது மனைவி சசிகலா, 26, கள்ள உறவில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகித்து அவரை ஞாயிற்றுக்கிழமை இரவு கழுத்தறுத்து கொலை செய்தார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சசிகலாவை உடனடியாக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சசிகலா உயிரிழந்தார். அன்றிரவே காஞ்சீபுரம் காவல்நிலையத்தில் ஏழுமலை சரணடைந்தார்.

மூன்றாவது படுகொலை குன்றத்தூரில் நடந்துள்ளது. அரிசி வியாபாரியான பன்னீர்செல்வம் தன் மனைவி கீர்த்தனாவை ஞாயிற்றுக்கிழமை கழுத்தறுத்து கொலை செய்தார்.

இருவருக்கும் குழந்தைகள் இல்லாததால் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதனால் கீர்த்தனா தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை தன் மனைவியுடன் சமாதானம் பேசுவதாக மாமனார் வீட்டுக்கு சென்ற பன்னீர் செல்வம் மாடியில் கீர்த்தனாவுடன் பேசினார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் கீர்த்தனாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார் பன்னீர் செல்வம்.


கீர்த்தனாவின் குடும்பத்தினர் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் சிகிச்சை பலனின்றி கீர்த்தனா உயிரிழந்தார்.

கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கிட்டத்தட்ட 20,000 குடும்ப வன்முறைகள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.