சோலார் பேனல்களுக்கான இங்காட்களை உருவாக்கியுள்ள சென்னை ஆராய்ச்சியாளர்கள்

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 18:49

சென்னை,

சென்னையில் உள்ள எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் சோலார் பேனல்களின் முக்கிய கூறுகளில் ஒன்றான உயர் செயல்திறன் கொண்ட இங்காட்களை (Ingots)  உருவாக்கியுள்ளனர்.

நாட்டில் இதுபோன்ற சோலார் இங்காட் உருவாக்கப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

இந்த தொழில்நுட்பம், அடுத்த தலைமுறை சோலார் பேனல் உற்பத்தி தொழில்நுட்பத்திற்கான மையமாக இந்தியாவை உருவாக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிலிருந்து ரூ .12 கோடி மானியத்தை வென்றுள்ளது.

சென்னையை சேர்ந்த ஆராய்ச்சி குழு பல அடுக்கு -படிக சிலிக்கான் இங்காட்களை (Multi – crystalline silicon ingots) வளர்ப்பதற்கான திசை திடப்படுத்தும் உலைகளை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

சென்னை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இங்காட்கள் பயன்படுத்தி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அடுத்த தலைமுறை சோலார் பேனல்களை சோதனை செய்த போது, அவற்றின் செயல்திறன் வணிக ரீதியாக கிடைக்கக்கூடிய சோலார் கலங்களை விட அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

"பல அடுக்கு-படிக சிலிக்கான் என்பது குறைந்த உற்பத்தி செலவு மற்றும் சூரிய ஒளி மின்கலங்களின் அதிக மாற்று திறன் ஆகியவற்றின் நன்மைகளைக் கொண்ட ஒரு முக்கியமான பொருள். ஒற்றை மற்றும் பல அடுக்கு படிக சிலிக்கான் (எம்.சி-எஸ்ஐ) சந்தை பங்கு தற்போது 90 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது. மேலும் இது எதிர்காலத்தில் அப்படியே இருக்கும்” என்று எஸ்.எஸ்.என் நிறுவனங்களின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் பேராசிரியர் பி.ராமசாமி கூறினார்.

இந்திய சூரிய ஒளி மின்கலத் தொழில்கள் சிலிக்கான் செல்களை இறக்குமதி செய்து அவற்றை சூரிய தொகுதிகளாக மாற்றுகின்றன. தற்போதைய நிலவரப்படி, நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சிலிக்கான் செல்களில் 98 சதவீதம் பல அடுக்கு படிக சிலிக்கான் செல்கள். இந்திய ஆய்வகங்களில் இந்த படிக சிலிக்கானை உருவாக்க மிகக் குறைந்த முயற்சிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உற்பத்தி திறன்களின் பற்றாக்குறையால் சூரிய ஒளி பேனல்களை தயாரிக்க இந்தியா இறக்குமதியைச் சார்ந்துள்ளது. கடந்த 2018-19 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா 220 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள சூரிய ஒளிமின்னழுத்த (பி.வி) செல்கள், பேனல்கள் மற்றும் தொகுதிகள் ஆகியவற்றை இறக்குமதி செய்தது.

சூரிய ஒளி பேனல்களுக்கான செல்கள் மற்றும் இங்காட்களை உற்பத்தி செய்ய தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன் இல்லாதது தான் இந்த பிரச்சனைக்கு காரணம். ஜப்பான், ஜெர்மனி, தைவான், தென் கொரியா, பின்லாந்து மற்றும் சீனா போன்ற ஒரு சில நாடுகள் சூரிய ஒளி இங்காட்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன ”என்று பேராசிரியர் ராமசாமி மேலும் கூறினார்.