பெற்றோரை பாதுகாப்பதாக சொத்து பத்திரங்களில் உறுதியளிக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 18:08

சென்னை,

முதியோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொத்துக்களை எழுதி கொடுக்கும் போது அந்த பத்திரத்தில் சட்டப்பிரிவு 23ன் கீழ் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை பாதுகாப்பதாக உறுதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்துள்ளது.

ஒருவேளை சொத்துக்களை பெறுவோர் அவ்வாறு உறுதி அளிக்க மறுத்தால் அவர்கள் அந்த சொத்தை முறைகேடாகவோ அல்லது வற்புறுத்தியோ பெற்றோரிடம் இருந்து எழுதி வாங்குவதாக அர்த்தம் என உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

பத்திரத்தை பதிவு செய்யும் துணை பதிவாளர் அல்லது பதிவாளர், பிரிவு 23 இல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனை அந்த பத்திரத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அப்படி இல்லாவிட்டால் அத்தகைய சொத்தை வாங்குபவர் அபாயத்தில் இருப்பார். எவ்வாறாயினும், மேற்கண்ட நிபந்தனை இல்லாவிட்டால், சம்பந்தப்பட்ட முதியோர்கள் தீர்ப்பாயத்தை அணுக முடியாது.

சில முதியோர்கள் தங்கள் சொத்துப் பத்திரங்களை ரத்து செய்வது தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுக்களின் ஒரு பிரிவின் மீதான விசாரணையின் போது நீதிபதி வைத்தியநாதன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

வயதான பெற்றோரை பாதுகாக்க சட்டவிதிகள் இருந்தாலும், பலரது பிள்ளைகள் சொத்துக்களைப் பெற்றவுடன் தங்கள் பெற்றோரை கைவிடுகிறார்கள்.

வயதான பெற்றோரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் உள்ளவர்கள் அவர்களை ஒதுக்கி வைத்தால், சட்டப்பிரிவு 24 ன் படி சிறையில் அடைக்கப்படுவார்கள். அபராதம் விதிப்பது இரண்டாம் நிலை மட்டுமே. சட்டப்பிரிவு 24 வது பிரிவில் எதேனும் ஒரு தண்டனை வழங்கலாம் என்றாலும், சிறைவாசம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று நீதிபதி வைத்தியநாதன் கூறினார்.