செய்தித்தாள்கள், தொலைகாட்சியில் இனி அரசு விளம்பரங்கள் வெளிவராது : தமிழக அரசு தகவல்

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 17:29

சென்னை:

தமிழக அரசின் விளம்பரங்கள்  இனி  செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளிவராது.  பிப்ரவரி 18ம் தேதி முதல் விளம்பரங்கள் வெளியிடுவதை தமிழக அரசு முற்றிலுமாக நிறுத்திவிட்டது என சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்கள்கிழமை  தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏறக்குறைய அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும், செய்தித்தாள்களிலும் விளம்பரங்கள் மூலம் வாக்காளர்களை கவர்ந்திழுக்க அதிமுக அரசு கோடிக்கணக்கில் பொது நிதியை செலவழித்துள்ளதாக குற்றம்சாட்டி திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வழக்கறிஞர் ஜெனரல் விஜய் நாராயண் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசின் பதிலை சமர்ப்பித்தார்.

“கடந்த நான்கு ஆண்டுகளாக மாநில அரசின் செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் மட்டுமே விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இந்திய தேர்தல் ஆணையம் (இ.சி.ஐ) மாநிலத்திற்கான தேர்தலை அறிவித்தவுடன் இதுபோன்ற நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்படும். ஏற்கெனவே கடந்த வியாழக்கிழமை முதல் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுவிட்டதால் இந்த விவகாரம் பயனற்றதாகிவிட்டது” என்று வழக்கறிஞர் விஜய் நாராயண் கூறினார்.

முன்னதாக, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி வில்சன்  ‘‘சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் ஆகியவை அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள். கடந்த இரண்டு மாதங்களாக மாநில முதல்வர் அனைத்து தொலைக்காட்சி சேனல்கள், செய்தித்தாள்கள் மற்றும் அனைத்து வலைத்தளங்களிலும் வணிக இணைய தளங்களில் விளம்பரப்படுத்துவதில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என வில்சன் தெரிவித்தார்.

இதற்கு, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இருவரும் இது ஒரு ஆளும் கட்சியாக இருப்பதன் நன்மைகள். ஆட்சிக்கு வந்ததும் திமுகவுக்கும் இந்த நன்மை கிடைக்கும் என்றும் கூறினர்

வழக்கில் தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான  மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபால் இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவிடம் கருத்துக்களைக் கோரியுள்ளதாகவும், பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கோரினார்.

இறுதியில் இந்த வழக்கு விசாரணை மார்ச் 2ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.