8 மத்திய விருதுகள் மோசமான ஆட்சிக்கு அடையாளமா ? திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி

பதிவு செய்த நாள் : 23 பிப்ரவரி 2021 17:00

கொல்கத்தா,

மேற்குவங்கத்தில் மோசமான ஆட்சி நடப்பதாக பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த குற்றச்சாட்டு உண்மை என்றால் மத்திய பாஜக அரசிடம் இருந்து எப்படி 8 விருதுகளை பெற்றோம் என திரிணாமுல் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் மோடி நேற்று கொல்கத்தாவின் ஹூக்லியில் உரையாற்றிய போது திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார். மேற்குவங்க மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் சென்று சேராமல் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தடுப்பதாக குற்றம்சாட்டினார். மேலும் மிரட்டி பணம் பறிப்போரின் ஆட்சி நடக்கும் வரை மேற்குவங்கத்தில் வளர்ச்சிகு இடமில்லை என மோடி கூறினார்.

மேற்குவங்கத்தில் உண்மையான மாற்றம் வர பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகள் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி., டெரெக் ஓ பிரையன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மத்திய அரசின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியின் கீழ் நிதியுதவி பெறவேண்டிய 2.5 லட்சம் பயனாளிகளின் விவரங்களை ஏற்கெனவே மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அனுப்பிவிட்டது. ஆனால் இதுவரை யாருக்கும் எதுவும் கிடைக்கவில்லை என டெரெக் ஓ பிரையன் குற்றம் சாட்டியுள்ளார்.

சுத்தமான குழாய் நீருக்காக மத்திய அரசு வழங்கிய ரூ .1,700 கோடியை மேற்குவங்க அரசு பயன்படுத்தவில்லை என்ற மோடியின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்துள்ள பிரையன் “ முதல்வர் மம்தா பானர்ஜியின் 58,000 கோடி ரூபாய் செலவிலான ஜல் ஸ்வப்னோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டு கோடி வீடுகளுக்கு குழாய் நீர் வழங்கப்படும். இதற்கான செலவைவு முழுக்க முழுக்க மாநில அரசால் ஏற்கப்படுகிறது” என பிரையன் தெரிவித்துள்ளார்.

ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, இருந்த போது தம்தம் -தக்ஷினேஷ்வர் மெட்ரோவுக்கு 2010 இல் அடித்தளம் அமைத்தார். ஆனால் அதை நிறைவேற்ற “ஏழு ஆண்டுகளாக, மத்திய பாஜக அரசு நிதி ஒதுக்கவில்லை. ஆனால் தற்போது தேர்தலை முன்னிட்டு அந்த திட்டத்திற்கான பெயரை வாங்க விரைந்து வருகிறது

வங்காளத்தில் அன்னை துர்காவை மக்கள் வணங்க முடியவில்லை என பிரதமர் கூறினார். 2020ம் ஆண்டில் துர்கா பூஜைக்கு மாநிலத்தில் உள்ள பூஜைக் குழுக்கள் மற்றும் அமைப்பாளர்களுக்கு சிறப்பு சலுகைகள், உதவி வழங்கப்பட்டன என்று பிரையன் கூறியுள்ளார்.

தொழில்துறையில் முன்னேற்றம்

மேற்குவங்கத்தில் வளர்ச்சி இல்லை என பிரதமர் கூறியதற்கு டெரெக் ஓ பிரையன் பதிலளிக்கையில் :

மேற்குவங்கத்தில் ஒரு நபரின் வருமானம் 2010 ல் ரூ.51,543 ரூபாயிலிருந்து 2019 ல் ரூ.,09,491 ஆக  உயர்ந்துள்ளது. கடந்த தசாப்தத்தில் வங்காளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 53 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேற்குவங்கத்தில் உள்ளவர்கள் வேலைக்கு வெளியே செல்வதாக பிரதமர் குற்றம்சாட்டினார். இங்குள்ள 89 லட்சம் சிறு தொழில்கள் வங்காளத்தில் 1.3 கோடி மக்களைப் பயன்படுத்துகின்றன. இது 2012 ல் 34.6 லட்சமாக இருந்தது. கடந்த தசாப்தத்தை விட தற்போது தொழிற்சாலைகள் 15 சதவீதமாகவும் தொழிற்சாலை தொழிலாளர்களின் வருவாய் 77 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

வங்காளத்தில் சணல் தொழில் மற்றும் உருளைக்கிழங்கு சாகுபடி தோல்வியுற்றது என்ற பிரதமர் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. கடந்த 2019 ஆம் ஆண்டில், ஏழு கோடி சணல் பைகளை அரசு கொள்முதல் செய்தது. அதேசமயம் கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்கள் தங்கள் கவலைகளை தெரிவிக்கக்கூடிய சணல் ஆணையத்தை மத்திய அரசு ஒழித்தது.

வங்காளத்திற்கு 30 லட்சம் மெட்ரிக் டன் உருளைக்கிழங்கை ஏற்றுமதி செய்யும் திறன் உள்ளது. ஆனால் மத்திய அரசு அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து உருளைக்கிழங்கை நீக்கியுள்ளது. மேலும் இதனால் ஏற்பட்ட தொழில்துறை பற்றாக்குறைக்கு மாநில அரசை குற்றம் சாட்டுகிறது என டெரெக் ஓ பிரையன் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் திட்டம் துவங்குவதற்கு 2 ஆண்டுகள் முன்பே மேற்குவங்கத்தில் ஸ்வஸ்திய சதி சுகாதார திட்டம் துவங்கப்பட்டுவிட்டது. இந்த திட்டத்திற்கான செலவை மேற்குவங்கம் முழுமையாக ஏற்கிறது. ஆனால் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மாநில அரசுகள் வெறும் 40 சதவீத செலவுகளை மட்டுமே ஏற்கின்றன என பிரையன் கூறியுள்ளார்.