பாரத தாய்க்கு சொந்தமான ஒரே தொழில் விவசாயம் மட்டுமே – கேரளாவில் ராகுல் காந்தி பேச்சு

பதிவு செய்த நாள் : 22 பிப்ரவரி 2021 18:51

வயநாடு,

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான கேரளாவின் வயநாட்டில் பேசுகையில், பாரதத் தாய்க்கு சொந்தமான ஒரே தொழில் விவசாயம் மட்டும் தான் என கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, சட்டமன்றத் தேர்தலை விரைவில் சந்திக்க இருக்கும் கேரளாவில், விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட டிராக்டர் பேரணியில் கலந்து கொண்டார். இந்த பேரணி திரிக்கைபட்டாவில் தொடங்கி முட்டில் வரை 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடத்தப்பட்டது. இந்த பேரணியில் ராகுல் காந்தி, டிராக்டர் ஓட்டிக் கொண்டு வந்தார். அதன் பின்னர் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய ராகுல் காந்தி கூறுகையில்:-

இந்திய விவசாயிகள் சந்தித்துவரும் சிரமங்களை முழு உலகமே பார்க்க முடியும். ஆனால், டெல்லியில் உள்ள அரசால் அவர்களின் வலியைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

பாப் இசைக் கலைஞர்கள் கூட இந்திய விவசாயிகளின் நிலை குறித்து கருத்துகளை தெரிவிக்கின்றனர். ஆனால், இந்திய அரசுக்கு அதில் ஆர்வமே இருப்பதில்லை. நிர்பந்திக்கப்பட்டாலே ஒழிய, அவர்கள் 3 சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதில்லை.

இந்த 3 சட்டங்களும் இந்தியாவின் வேளாண் கட்டமைப்பை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டு உள்ளன. இந்த தொழிலை, மோடியின் 2-3 நண்பர்களிடம் ஒப்படைக்கவே இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன.

ரூ. 40 லட்சம் கோடி மதிப்புடைய வேளாண் தொழில் தான், இந்தியாவின் மிகப்பெரிய தொழில் ஆகும். இது கோடிக்கணக்கான இந்தியர்களால் சொந்தம் கொண்டாடப்படுகிறது. விவசாயம் மட்டுமே பாரதத் தாய்க்கு சொந்தமான ஒரே தொழில். அதனை சிலர் உரிமையாக்க விரும்புகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.