சேலம்-சென்னை விரைவுச்சாலை 2021-22 இல் பணிகள் தொடங்கப்படும் - அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

பதிவு செய்த நாள் : 21 பிப்ரவரி 2021 20:56

சேலம்: 

சேலம் - சென்னை விரைவுச்சாலை 2021-22 இல் பணிகள் தொடங்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

சேலத்தை அருகே கெஜல்நாயக்கன்பட்டியில் பாஜக இளைஞரணி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியது:

கொரோனா காலகட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடித்து நட்பு நாடுகளுக்கும் வழங்கி வருகிறோம்.

வசுதெய்வ குடும்பகம் என்பது போல உலகம் ஒரு குடும்பம் என்பதற்கு இணங்க பிற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி தந்து வருகிறோம்.

கொரோனா தொற்றால் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டோம். ஏழை மக்களுக்கு ரூ.1.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கி 80 கோடி பேருக்கு நிவாரணம் வழங்கி வருகிறோம்.

நாட்டின் பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது. 2021-22 இல் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 11.5 சதவீதம் இலக்கை எட்டும் என சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.

பிரதமரின் விவசாய திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு  உதவுவதற்காக  ஆண்டுக்கு  ரூ.6000  வங்கிக்  கணக்கில்  செலுத்தப்படுகிறது.

நாட்டின் கழிவறை இல்லாத வீடுகளில் கழிவறை, வீடு இல்லாதவர்களுக்கு வீடு, சாலைகள் ஆகியவை மத்திய  அரசு  செயல்படுத்திக்  கொண்டிருக்கிறது.   ஜல் ஜீவன் திட்டத்தில் ஒவ்வொரு வீடுகளுக்கும் சுகாதார குடிநீர் வழங்கப்பட உள்ளது. இதுவரை 3 கோடி குடும்பங்களுக்கு சுகாதார குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு திட்டங்களை மேம்படுத்துவதில் சேலம்-சென்னை விரைவு வழிசாலை திட்டம் 2021-22 இல் பணிகள் தொடங்கப்படும்.

நாட்டிலேயே உத்தரபிரதேசம் மற்றும் தமிழகத்தில் தான் ராணுவ வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதில் ரூ.8000 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது 21 தனியார் நிறுவனங்கள், மூன்று அரசு நிறுவனங்கள் என ரூ.1,100 கோடி மூலதனத்தை ஈட்டியுள்ளது.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஒவ்வொரு குடிமகனின்  அத்தியாவசிய  தேவையை  பூர்த்தி  செய்வது  அரசின் கடமையாகும்.  சுய சார்பு திட்டத்திற்கு ரூ.20 லட்சம் கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், தொழில்முனைவோராக மாறி வருகின்றனர். இதனால் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது. 

தமிழகத்தில் ரூ.33,807 கோடி கடனாகப் பெற்றுள்ளனர். சிறு, குறுந்தொழில்முனைவோர் 2020 நவம்பர் வரை ரூ.22.53 கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.17.75 கோடி பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி, தில்லியில் இருந்து ஒரு ரூபாய் அனுப்பினால் 13 பைசா தான் மக்களுக்கு சென்றடைகிறது என்றார்.  தற்போது பிரதமர் 100 பைசா அனுப்பினால், 100  பைசாவும்  மக்களுக்குப் போய் சேருகிறது.  இவையெல்லாம்  டிஜிட்டல்  இந்தியா திட்டத்தின் மூலமாக     சாத்தியமாகியிருக்கிறது. இதன் மூலம் ஊழல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் மேம்பாட்டிற்காக மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையில் ரூ.1246 கோடியில் வர உள்ளது. மேலும் 6 மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மூன்று மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது.

மத்திய அரசு தமிழகத்தின் மேம்பாட்டுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது 32 சதவீதமாக இருந்ததை 42 சதவதீமாக அதிகரித்திருக்கிறது.

தமிழகத்திற்கு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.5.42 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால்,  கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில்  ரூ.94,540  கோடி    மட்டுமே  தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டது. 

ரஃபேல் விமான கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக, காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. இந்த விஷயத்தில் பிரதமர் மீது அவதூறுகளை பரப்பினர். ஆனால், எந்த ஊழலும் நடைபெறவில்லையென்று சி.ஏ.ஜி. அறிக்கையில்    கூறப்பட்டது.

1974 இல் காங்கிரஸ் தலைமையிலான அரசு கச்சத்தீவை இலங்கைக்கு  தாரை வார்த்து கொடுக்கப்பட்ட போது, அதற்கு  எதிர்ப்பு  தெரிவித்து  உச்சநீதிமன்றம்  சென்றவர்தான்  மறைந்த பிரதமர் வாஜ்பாய்.

தமிழகத்தில் மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் செயல்திட்டங்களை ஏற்று செயல்படுத்தி வருகிறோம்.

பிரதமர் மோடியும் இலங்கை தமிழர்கள் நலனில் அக்கறை கொண்டவராக உள்ளார். 2015 இல் யாழ்ப்பாணம் சென்ற ஒரே இந்திய பிரதமர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். அங்கு 27,000 இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்தார்.

மத்திய அரசு இலங்கை தமிழர்கள் சம உரிமை, அமைதி, சுதந்திரத்துடன் வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இலங்கை  கடற்படையினரால்  கைது  செய்யப்படும்  மீனவர்கள் விஷயத்தில் கவனமாகக் கையாள்கிறோம்.  சுமார்  1600     மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 300 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து  9 சுற்று பேச்சுவார்த்தைக்குப்  பிறகு  முடிவு  எட்டப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ்  கட்சியோ,  நாட்டின்  நிலத்தை  விட்டுக் கொடுத்ததாக  குற்றம் சாட்டுகிறது.

ஒரு அங்குலம் நிலம் கூட அடுத்த நாட்டுக்கு விட்டுக்  கொடுக்க  மாட்டோம்.  நாட்டின்  நிலத்தைப் பாதுகாக்க என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக   இருக்கிறோம்.   

ராணுவ வீரர்களின் தியாகத்தை  கொச்சைப்படுத்துகிற  காங்கிரஸ்  நல்லவர்களா,    கெட்டவர்களா என்பதை  நீங்களே தெரிந்து  கொள்ள வேண்டும்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் என்ற முறையில் இதுவரை  நாட்டின்   ஒருமைப்பாடு,   எல்லை,   ஒற்றுமை   விஷயங்களில்   பாஜக   சமரசம்   செய்ததில்லை, செய்யவில்லை,  செய்யாது  என்ற  உத்தரவாதத்தை   தெரிவித்துக்  கொள்கிறேன்.   

காங்கிரஸ்  கட்சியோடு  திமுக  கூட்டணி  வைத்திருக்கிறது.  இவர்கள்  கூட்டணி  ஏற்புடையது  அல்ல. காங்கிரஸ்  கட்சியும்,  திமுகவும்  மக்களுக்கு  பாரமாக  இருக்கின்ற  கட்சிகளாகும். இவர்கள் சிறுபான்மையினரை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில்  நிலையான  நல்லாட்சி  வேண்டும்.  பாஜகவின்  வெற்றிவேல்  யாத்திரை  திமுக, காங்கிரஸை  ஆட்டம்  காண  வைத்துள்ளது.  தமிழக  மக்கள்  காங்கிரஸ்  திமுக  கூட்டணியை  விரும்ப மாட்டார்கள்.

அவர்கள்  தாமரை,   இரட்டை   இலை கூட்டணியைத்தான்   விரும்புகிறார்கள்.    தாமரையும், இரட்டை   இலையும்   மட்டுமே  தமிழகத்திற்கு   வளமையை,   முன்னேற்றத்தை   ஏற்படுத்த முடியும்.  

வரும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றார்.