1997ல் அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்க கோரிய வழக்கில் மனுதாரருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பதிவு செய்த நாள் : 14 ஜனவரி 2022 14:04

1997-ல் அரசு கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்ககோரி நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் மனுதாரருக்கு 6 லட்சத்து 13 ஆயிரத்து 489 ரூபாயை இழப்பீடு மற்றும் வட்டியுடன் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

இப்பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய 20.1.2022 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதற்குள் இழப்பீட்டு தொகையை வங்கியில் டெபாசிட் செய்ய தவறினால், நெல்லை மாவட்ட ஆட்சியரின் அலுவலக கார் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்கள் ஜப்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை அம்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீனிவாசன். இவருக்கு சொந்தமாக நிலத்தை 1997-ல் அரசு கையகப்படுத்தியது. இதற்கு இழப்பீடு வழங்க 1997-ல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்கப்படாத நிலையில் ஸ்ரீனிவாசன், உயர் நீதிமன்றத்தில் 2012-ல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு 10.10.2018-ல் விசாரணைக்கு வந்தபோது, அப்போதைய அரசு வழக்கறிஞர் ஆஜராகி, ஸ்ரீனிவாசனுக்கு இழப்பீடு வழங்கப்படும் என நீதிமன்றத்தில் உறுதியளித்தார். அதன் பிறகும் இழப்பீடு வழங்கவில்லை.

இந்நிலையில் ஸ்ரீனிவாசனின் மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா,

"மனுதாரருக்கு 6 லட்சத்து 13 ஆயிரத்து 489 ரூபாயை இழப்பீடு மற்றும் வட்டியுடன் வழங்க வேண்டும். இப்பணத்தை வங்கியில் டெபாசிட் செய்ய 20.1.2022 வரை அவகாசம் வழங்கப்படுகிறது.  அதற்குள் இழப்பீட்டு தொகையை வங்கியில் டெபாசிட் செய்யாவிட்டால் நெல்லை மாவட்ட ஆட்சியரின் அலுவலக கார் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அசையும் பொருட்கள் ஜப்தி செய்யப்படும். இதற்காக அம்பாசமுத்திரம் சார்பு நீதிமன்றத்துக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்குமாறு நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்"

என உத்தரவிட்டுள்ளார்.