மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறை சட்ட முன்வடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க கோரி பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு பல்வேறு போராட்ட அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 13 ஜனவரி 2022 19:42

மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறை குறித்த சட்ட முன்வடிவை தமிழக ஆளுநர் அவர்கள் விரைந்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசு தலைவர் உடனடியாக சட்ட முன்வடிவு ஒப்புதல் வழங்க வேண்டும்.

 இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி மாதம்  தமிழ்நாடு முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை நடத்துவது எனவும், மகாத்மா காந்தி அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நாளான ஜனவரி 30-ஆம் தேதி அன்று உண்ணா நிலை அறப்போராட்டம் நிகழ்த்தப் படும் என்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்கும் வரை அந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,


நீட் தேர்வுக்கு எதிராக தமிழக மக்கள் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகின்றனர். எனினும் நீட் தேர்வு விலக்கு அளிக்க மறுத்து ஒன்றிய அரசு முரண்டு பிடித்து வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு அமைத்த வல்லுநர் குழு ஆய்வு செய்து அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தமிழக சட்டப்பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது .இவ்வாறு அனுப்பிய சட்ட முன் வடிவு பல மாதங்கள்  கடந்த பிறகும் இதுவரை ஆளுநர் மாளிகையில் இருந்து எந்தவிதமான பதிலும் வராது வருத்தமளிக்கிறது. மேல்நிலைப்பள்ளியில் பாடத்திட்டத்தில் அரசால் ஒருமுறை மதிப்பிடப்பட்ட மாணவர்களை மீண்டும் அதே இடத்தில் வேறு ஒரு முகமை மதிப்பிடுவதும் அந்த முகமை தரும் மதிப்பீட்டு சான்று மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு தகுதியானது என்று எடுத்துக் கொள்வதும் பொது  நீதிக்கு எதிரானது.

 மாநிலத்தின் தேவை, மாநிலத்தின் நலன், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் உரிமை, ஆகியவற்றின் அடிப்படையில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு ரத்து தொடர்பான சட்ட முன்வடிவு தமிழக ஆளுநர் உடனே குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும்.

 பொதுப்பட்டியலில் கல்வி இருப்பதினால் ஒன்றிய அரசும் மாநில அரசும் இதற்காக சட்டம் இயற்றலாம். இதனை வலியுறுத்தி தமிழகமெங்கும் ஜனவரி மாதம் முதல் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டு வருவதாகவும், மேலும் இதனை வலியுறுத்தி வருகிற 30-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து இயக்கங்களும் இணைந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு இன்று நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.