எட்டையபுரம் பாரதியார் இல்ல மணிமண்டபத்தில் பாரதியார் சிலைக்கு தமிழக ஆளுநர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

பதிவு செய்த நாள் : 13 டிசம்பர் 2021 17:00

தூத்துக்குடி

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் உள்ள மகாகவி பாரதியார் இல்ல மணிமண்டபத்தில் பாரதியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டிசம்பர் 13ஆம் தேதி (இன்று) முதல் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதற்காக இன்று காலை 11:00 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தடைந்தார்.

தூத்துக்குடியில் இருந்து எட்டயபுரம் வந்த ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் அவரது மனைவி லட்சுமி ரவி ஆகியோர் பாரதியார் பிறந்த இல்லம் மற்றும் பாரதியார் மணிமண்டபத்தில் பாரதியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், பாரதியார் குறித்த போட்டோ ஆல்பங்களை பார்வையிட்டார்.

பிற்பகல் 1 மணியளவில் தூத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், எட்டயபுரம் வட்டாட்சியர் சசிகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் வருகையை முன்னிட்டு எட்டையபுரத்தில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்