சிவகாசியில் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நடைபயணப் போராட்டம்

பதிவு செய்த நாள் : 24 நவம்பர் 2021 20:58

சிவகாசி :விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று, ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபயணம் போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், சிவகாசி எம்எல்ஏ அரசன் அசோகன், மாவட்ட தலைவர் ராஜா சொக்கர், இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், முன்னாள் நகர தலைவர் சசிநகர் முருகேசன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். எம்பி மாணிக்கம் தாகூர் பேசும்போது, கடந்த 7 ஆண்டுகளாக ஒன்றியத்தில் மோடி அரசு வந்ததில் இருந்து இந்திய மக்களுக்கு பல வகைகளிலும் இடையூறுகள் ஏற்பட்டு வருகிறது. நாட்டு மக்களை பிரிக்கும் வேலைகளைத்தான் மோடி அரசு செய்து வருகிறது. சிறு மற்றும் குறு தொழில்கள் செய்யும் யாரும் நிம்மதியாக இல்லை. விவசாயிகளை பாதிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மோடி, இன்று 5 மாநில தேர்தலை மனதில் கொண்டு அந்த சட்டங்களை வாபஸ் வாங்கியுள்ளார்.


 ஆனாலும் அவரின் பேச்சை நம்பாத பல லட்சம் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உலகத்திலேயே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பது இந்தியாவில் தான். மோடி ஆட்சிக்கு வந்த 7 ஆண்டுகளில், எரி பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ளாமல், மேலும் மேலும் இந்த அரசு சாமானிய மக்களை தண்டிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மோடிக்கு எதரான மனநிலையில் மக்கள் உள்ளனர். விரைவில் ஒன்றிய மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி வருகின்றனர். ராகுல்காந்தி செல்லும் இடங்களில் எல்லாம், அவருக்கு மக்கள் மிகுந்த வரவேற்பு வழங்குகின்றனர். ஒன்றிய மோடி அரசின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் இந்த நடைபயணம் போராட்டத்தை, காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் நடத்துகிறது என்று பேசினார். சிவகாசியின் முக்கிய வீதிகள், ரதவீதிகளில் காங்கிரஸ் நடைபயணப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.